ரூ.634 கோடி மோசடி விவகாரத்தில் எனக்கு தொடர்பா....? : ஆதாரமில்லாமல் பேசாதீங்க - ஜனனி அசோக்குமார்
கடந்த தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தார். அந்த துறையில், டெண்டர் ஒதுக்கீடு, பணி நியமனம், பணியிட மாறுதலில் பல நூறு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேரு மற்றும் அவரது தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் உட்பட, 25 இடங்களில் சோதனை நடத்தி, 170 ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இந்த வழக்கில் டிவி நடிகைகள் இருவரது பெயர்கள் அடிபடுகின்றன. அவர்களுக்கு பணம் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த நடிகையரில் ஒருவர் ஜனனி அசோக்குமார் என வலைதளங்களில் தொடர்ந்து செய்தி பரவின.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தேவையின்றி தனது பெயர் தொடர்புபடுத்தப்பட்டு இருப்பதாக நடிகை ஜனனி அசோக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்...
‛‛கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ரூ.634 கோடி மோசடி விவகாரத்தில் எனக்குத் தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எப்போதும் அரசியலில் இருந்து விலகியே இருப்பவள். எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எனக்கு தொடர்பு கிடையாது. அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்பும் இல்லை. எனவே, என் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை.
ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை, அவரிடம் விளக்கம் கேட்காமலும், உரிய ஆதாரங்களை சரிபார்க்காமலும் ஊடகங்கள் வெளியிடுவது எந்த வகையில் நியாயம்? விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை என்பது ஒருவர் குற்றம் செய்துவிட்டார் என்பதற்கான ஆதாரமல்ல.
எந்தவிதமான பின்புல ஆதரவும் இல்லாமல், சொந்த உழைப்பால் எனது வாழ்க்கையையும் திரைத்துறை பயணத்தையும் உருவாக்கியிருக்கிறேன். இத்தனை ஆண்டுகால உழைப்பையும் நற்பெயரையும், உண்மைக்குப் புறம்பான செய்திகள் சிதைத்துவிடுவது வேதனையளிக்கிறது. குறிப்பாக, உண்மைகளை அறிந்துகொள்ளாமல் ஒரு பெண்ணை எளிதில் குற்றம் சாட்டும் சமூகத்தின் போக்கு வருத்தமளிக்கிறது.
எனவே, ஊடகங்களும் சமூக வலைதளப் பயனாளர்களும் எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும். என் பெயரை இந்த விவகாரத்துடன் தவறாக தொடர்புபடுத்தும் பதிவுகளை நீக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி''.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.