உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 63 ஆண்டுகளுக்கு முன்பே அதிரவைத்த படம்

பிளாஷ்பேக் : 63 ஆண்டுகளுக்கு முன்பே அதிரவைத்த படம்

ஹாலிவுட் சினிமாவின் திகில் பட மன்னன் என்று போற்றப்பட்டவர், ஆல்பிரட் ஹிட்ச்காக். சைக்கோ, நார்த் பை நார்த்வெஸ்ட், வெர்டிகோ, சபோடாஜ், ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரெய்ன் மற்றும் 'தி மேன் ஹூ நியூ டூ மச்' போன்றவை அவரது உலக புகழ்பெற்ற படங்கள்.

இவரது தீவிரமான ரசிகராக இருந்தவர் தமிழ் பட இயக்குநரும், வீணை இசை கலைஞருமான வீணை பாலச்சந்தர். 'சபோடாஜ்' படத்தைத் தழுவி, உள்ளூர் சூழலுக்கு ஏற்ப கதையில் மாற்றங்களைச் செய்து தமிழில் உருவாக்கிய படம்தான் 'பொம்மை'.

ஒரு பயங்கரவாதி பொம்மைக்குள் வெடிகுண்டை மறைத்து வைத்து, ஒரு சிறுவன் மூலம் அதை அனுப்பி வைக்கிறான். அந்தச் சிறுவன், உள்ளே இருப்பது வெடிகுண்டு என்று தெரியாமல் பேருந்தில் பயணம் செய்கிறான். இறுதியில், பேருந்துக்குள் வெடிகுண்டு வெடிக்கிறது. அந்தச் சிறுவன் உட்பட பேருந்தில் இருந்த அனைவரும் கொல்லப்படுகிறார்கள். இது 'சபோடாஜ்' படத்தின் கதை. இதில் செத்தவர்கள் அனைவரும் பொதுமக்கள்.

ஆனால் இந்த கதையை வீணை பாலச்சந்தர் இப்படி மாற்றினார். பொம்மை நடக்கும் சக்தி கொண்டது. அது பல பேரின் கைகளுக்கு மாறி வில்லன் காருக்குள் கொண்டு செல்லப்பட்டு வெடிக்க வைக்கப்படுகிறது. செத்தவர்கள் அனைவரும் கொடூரமான வில்லன்கள்.

வீணை பாலச்சந்தரே நாயகனாக நடித்தார். பிற்காலத்தில் குணசித்தர வேடத்தில் மட்டுமே நடித்த வி. எஸ். ராகவன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவருடன் சாதன், மாலி, லட்சுமிராஜம், கோபாலகிருஷ்ணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர். பாரம்பரிய நடனக் கலைஞர் எல். விஜயலட்சுமி, இதில் நாயகியாக நடித்தார்.

வீணை எஸ்.பாலச்சந்தர் இசை அமைத்திருந்தார். ''நீயும் பொம்மை, நானும் பொம்மை' என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார் ஜேசுதாஸ். தணிக்கை பிரச்சினையில் சிக்கி தாமதமாக வெளியான போதும் பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் உண்மையான நாயகனாக பொம்மையை ஒரு சாலையோர கடையில் வாங்கி பயன்படுத்தினார் இயக்குநர் வீணை பாலச்சந்தர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !