பிளாஷ்பேக்: பாதியில் கைவிடப்பட்ட டி ஆர் மகாலிங்கத்தின் “தெருப்பாடகன்” திரைப்படம்
நாடகத் துறையிலிருந்து சினிமாவிற்கு வந்து, உச்சஸ்தாயியில் அநாயசமாக பாடும் வல்லமை பெற்ற, ஒரு தனித்துவமிக்க பாடகர் மற்றும் நடிகர் டி ஆர் மகாலிங்கம். 13 வயது சிறுவனாக இவர் நாடகத்தில் நடித்துப் பாடியதைக் கேட்டு, மெய்சிலிர்த்துப் போன ஏ வி மெய்யப்ப செட்டியார், தனது ஸ்டூடியோவிற்கு அப்போதே அழைத்து வந்து, தனது சொந்தப் படமான “நந்தகுமார்” திரைப்படத்தில், சிறு வயது பகவான் கிருஷ்ணன் வேடத்தில் நடிக்க வைத்து இவரை சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து ஏ வி எம் தயாரிப்பின் “ஸ்ரீவள்ளி”, “நாம் இருவர்”, “வேதாள உலகம்” போன்ற வெற்றித் திரைப்படங்களிலும், “மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பின் “ஆதித்தன் கனவு” உட்பட “பவளக்கொடி”, “மாயாவதி”, “இன்பவள்ளி”, “இதயகீதம்” என பிற தயாரிப்புத் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றிருந்த நிலையில், சொந்தமாக திரைப்பங்களைத் தயாரிக்கவும் தீர்மானித்தார் டி ஆர் மகாலிங்கம்.
அதன் விளைவாக “சுகுமார் புரொடக்ஷன்ஸ்” என்ற தனது சொந்த தயாரிப்புப் பதாகையின் கீழ், இவர் தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் “மச்சரேகை”. சர்வாதிகாரியாகவும், மச்சராஜனாகவும் இரட்டை வேடமேற்று டி ஆர் மகாலிங்கம் நடிப்பில், 1950ல் வெளிவந்த அவரது முதல் தயாரிப்பான இத்திரைப்படம் அவருக்கு ஒரு தோல்விப் படமாக அமைந்திருந்தாலும், தனது தயாரிப்புப் பணியை கைவிட மனமில்லாத டி ஆர் மகாலிங்கம், “மோகனசுந்தரம்”, “சின்னதுரை”, “விளையாட்டு பொம்மை” என தொடர் தோல்விப் படங்களாகவே தந்து கொண்டிருந்த நிலையில், எப்படியும் வெற்றித் திரைப்படத் தயாரிப்பாளராக வேண்டும் என்ற முனைப்போடு இவர் தயாரித்த மற்றுமொரு திரைப்படம்தான் இந்தத் “தெருப்பாடகன்” என்ற திரைப்படம்.
1953ல் டி ஆர் மகாலிங்கம் தயாரித்து வந்த இந்த “தெருப்பாடகன்” திரைப்படம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, இதுவும் பாதியிலேயே கைவிடப்பட்டது. “பாதாள பைரவி”, “தர்மதேவதா” ஆகிய டப்பிங் திரைப்படங்கள் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அப்போது அறிமுகமாகியிருந்த நடிகை கிரிஜாவை தனது நேரடி தமிழ் திரைப்படமான “தெருப்பாடகன்” மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் டி ஆர் மகாலிங்கம். ஆனால் படம் மேலும் வளராமல் நின்று போனதால், “என் வீடு”, “மனோகரா”, “இரு சகோதரிகள்” போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை கிரிஜா. சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் கசப்பான அனுபவங்களை மட்டுமே அறுவடை செய்து வந்த நடிகர் டி ஆர் மகாலிங்கம், சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்து, தனது சொந்த ஊருக்கே திரும்பி, நாடகங்களில் நடித்து வந்தார்.
மீண்டும் 1958ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் தயாரித்து வெளியிட்ட “மாலையிட்ட மங்ககை” திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, தனது அடுத்த சுற்று திரைப்பயணத்தை ஆரம்பித்தார். “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தின் மாபெரும் வெற்றி அவரை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த “ஆடவந்த தெய்வம்”, “திருவிளையாடல்”, “அகத்தியர்”, “ராஜ ராஜ சோழன்” போன்ற திரைப்படங்கள் இவரது பெயருக்கும், புகழுக்கும் பெருமை சேர்த்த திரைப்படங்களாக அமைந்திருந்தன. ஒரு பாடகராக, நடிகராக கலையுலகில் வெற்றி கண்ட இந்த அபூர்வத் திரைக் கலைஞர், ஒரு தயாரிப்பாளராக தோல்வியை மட்டுமே சந்தித்திருந்தார் என்பதுதான் துரதிர்ஷ்டமான ஒன்று.