நான் எழுதிய கதையே வேறு: 'கேம் சேஞ்சர்' கதையை ஷங்கர் மாற்றியது ஏன்?
தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் 'கேம் சேஞ்சர்'. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுதிய கதையை, ஷங்கர் திரைக்கதையாக மாற்றி, பெரிய பட்ஜெட்டில் இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்து தோல்வியை சந்தித்ததால், ஷங்கரின் மார்க்கெட் சரிந்தது.
இந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜ், கேம் சேஞ்சர் படத்திற்காக தான் எழுதிய கதை வேறு கோணத்தில் இருந்ததாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், ''நான் இயக்குனர் ஷங்கரிடம் கதையை கொடுத்தேன். அவர் திரைக்கதையையும் எழுதித் தரும்படி கேட்டார். ஆனால் அந்த சமயத்தில் நான் 'மஹான்' படத்திற்கான முதற்கட்ட வேலைகளில் இருந்தேன். அதனால் கதை மட்டும் தருகிறேன் என்றேன். நான் கொடுத்த கதையில், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, அரசியல் அமைப்பில் இருந்து கொண்டே சிஷ்டத்தை மாற்ற முயற்சிக்கிறார். யதார்த்தமான கதையாக இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும்.
இந்தி திரைப்படமான 'நியூட்டன்' படத்தின் பாணியை மனதில் வைத்து எழுதியிருந்தேன். மேலும், மதுரைப் பின்னணி, அதிரடி காட்சிகள் மற்றும் கதாநாயகனின் நண்பர்களைச் சுற்றிய உள்ளூர் கேங்ஸ்டர் அம்சங்களும் இருக்கும். ஆனால், ராம் சரண் போன்ற முன்னணி நடிகர் நடிக்கும் திரைப்படம், பிரமாண்ட பட்ஜெட் போன்ற காரணங்களால் ஒட்டுமொத்த கதையின் கோணமே மாறியதாக கருதுகிறேன். படம் பார்த்தபிறகே மொத்த கதையும் மாறியிருப்பது தெரிந்தது. ஆனாலும், எனது அசல் கதையை, இந்தியாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் திரைப்படமாக உருவாக்கியது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது'' என்றார்.