உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛சிவகுமார் 85' : இளமை என்னும் பூங்காற்று!

‛சிவகுமார் 85' : இளமை என்னும் பூங்காற்று!

வாரிசுகள் சூர்யா, கார்த்தி ஆகியோரின் இளைமையோடு இன்னும் புத்துணர்ச்சியுடன் போட்டிபோடும் தந்தை சிவகுமார் இன்று தனது 85 வயதில் இளமைத்துடிப்புடன் காலடி எடுத்து வைக்கிறார்.

பாக்யராஜ், பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவா, ஒளிப்பதிவாளர் செழியன் என்று தமிழ் சினிமா இந்த ஆண்டு அடைந்த இழப்புகள் மனம் கனக்கச் செய்கின்றவை. அந்த இழப்புகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் என்னும் நிலையில் 85 வயது மார்க்கண்டேயனான சிவகுமாரையும் அவர் உடல் நலம் பேணும் கலையையும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்வது மிக மிக அவசியமானதாகும்.

தனது 24வது வயதில் 1965-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான காக்கும் கரங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சிவகுமார். துவக்க காலங்களில் கதாநாயகர்களுக்கு தம்பி, மகன் போன்ற பாத்திரங்களில் நடித்தவருக்கு சிவாஜியின் மகனாக 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடித்தபிறகே கொஞ்சம் உயர்ந்த இடம் கிடைக்கிறது. அடுத்து சில படங்களில் கதாநாயகன் பாத்திரங்கள் கிடைத்தபோதும் துணைப் பாத்திரங்களையும் தவிர்த்துவிடாமல் நடித்து வந்த சிவகுமார் 1976ல் 'அன்னக்கிளியை'த் தொட்டபோது சுமார் 70 படங்களைக் கடந்திருந்தார்.

சிவகுமாரின் 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் அவருக்கு முக்கியமான இயக்குநர் பாலசந்தர். தனது 'அரங்கேற்றம்' படத்தில் சிவகுமாருக்கு தனித்த அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தவர் 'அக்னி சாட்சி', 'சிந்து பைரவி' படங்களின் மூலம் ஈடு இணையற்ற நடிகர் என்று பெயர் வாங்கிக் கொடுத்தார்.

அதிலும் முக்கியமாக சிந்து பைரவி படத்தில் ஜே.கே என்னும் பாகவதர் வேடத்தில் நடித்ததற்காக சுஹாசினியோடு சேர்த்து சிவகுமாருக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று சக நடிகர்களே ஆதங்கப்பட்டார்கள். பாகவதர் வேடம் தத்ரூபாமாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜா இசைத்த கீர்த்தனைகளை எப்படியெல்லாம் மனப்பாடம் செய்து நடித்தேன் என்று சிவகுமார் பேட்டிகளில் சொல்லும்போது அவரது ஈடுபாடு கேட்பவர்களை சிலிர்க்க வைக்கும்.
நடிகர்கள் மத்தியில் போட்டி மனப்பான்மை மிக சகஜமான ஒன்று. ஆனால் சிவகுமார் எந்த ஒரு சக நடிகரையும் தனது போட்டியாளராகக் கருதாமல் தனி வழியனாகப் பயணித்தார். ஆக்ஷன் ஹீரோவாகும் எண்ணம் இல்லாமல் கடைசிவரை குணச்சித்திர நடிகராகவே பயணித்தது அவரது இன்னொரு சிறப்பு.

'99ல் அதிரடித்த 'சேது'வுக்குப் பின்னர் ஏராளமான படங்களில் வாய்ப்பு வந்தபோதும் மேலும் ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு பூவெல்லாம் வாசத்தோடு திரையுலகிருந்து ஒதுங்கிக் கொண்டவரை 'சித்தி', 'அண்ணாமலை' ஆகிய இரு தொலைக்காட்சித் தொடர்கள் மீண்டும் பிசியாக்கின.

இப்போது தொலைக்காட்சி தொடர்களுக்கும் முற்றும் போட்டுவிட்டு ஆன்மிகச் சொற்பொழிவுகள், யோகா பயிற்சி என்று தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

துவக்கத்தில் சொன்னதுபோல் திரையுலகப் பிரபலங்கள் கோடிகளில் சம்பாதித்துக் குவித்துவிட்டு தங்கள் உடல்நலனைக் கோட்டைவிட்டு விடுகின்றனர். 500 கோடி பணம் இருக்கு. ஆனா அந்த ரெண்டு கிட்னியும் டேமேஜா இருக்கு மொமண்டில் இருப்பவர்கள் பலர்.

இவர்களில் விதிவிலக்கானவர் சிவகுமார். அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த காலத்திலும் புகைப்பது சியர்ஸ் சொல்லுவது உள்ளிட்ட எந்த பழக்கங்களும் தன்னை அண்டாது பார்த்துக் கொண்டவர். படப்பிடிப்பு நாட்களிலும் உடற்பயிற்சியைக் கைவிடாதவர். உணவுப்பழக்கங்கள் குறித்து அவர் கொடுக்கும் டிப்ஸும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.

காலச்சூழலில் பிரபல விஐபிகள் கூட இன்னாரின் தந்தை என்று மாறிவிடுவது சகஜம். ஆனால் இன்று அவரது பிள்ளைகள் சூர்யாவும், கார்த்தியும் தமிழின் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள் என்றாலும் அவர்களின் தந்தையாக விளிக்கப்படாமல் சிவக்குமார் என்ற தனித்த அடையாளமாக வலம் வருவது காலம் அவருக்கு சூட்டியிருக்கும் பூமாலை.

சிவகுமாரின் டாப் டென் படங்கள்


1. சிந்து பைரவி
2. ரோசாப்பூ ரவிக்கைக்காரி
3. மறுபக்கம்
4. இன்று நீ நாளை நான்
5. உயர்ந்த மனிதன்
6. அக்னி சாட்சி
7. அவன் அவள் அது
8. வண்டிச்சக்கரம்
9. அரங்கேற்றம்
10. அன்னக்கிளி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !