இப்படியொரு வேடத்தில் நடித்தது இல்லை : 'கேஜிஎப்' ஸ்ரீநிதி ஷெட்டி
கன்னடப் படமான 'கேஜிஎப்' படம் மூலம் பிரபலமான நடிகையாக உயர்ந்தவர் கன்னட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. அதன்பின் தமிழில் விக்ரம் ஜோடியாக 'கோப்ரா' படத்தில் நடித்தார். தெலுங்கில் 'ஹிட் 3, தெலுசு கதா' ஆகிய படங்களில் நடித்து அடுத்து அக்டோபர் 30ல் வெளியாக உள்ள தெலுங்குப் படமான 'ஆதர்ஷ குடும்பம் - எகே 47' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் 8 கோடி சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
“கேஜிஎப் படங்களின் வெற்றிக்குப் பிறகு நான் ஒரு சில படங்களில்தான் நடித்திருக்கிறேன். அப்படியிருக்கும் போது நான் அவ்வளவு தொகையைக் கேட்பதாக சொல்வது எப்படி நடக்கும். அனைத்துமே வதந்திகள்தான்.
இந்த 'ஆதர்ஷ குடும்பம் - எகே 47' படத்தில் நான் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுவரை அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. இதுதான் முதல் முறை. இப்படத்தை 'பிளாஸ்ட்' படத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இரண்டு படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.