லேடி கேங்ஸ்டராக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிக்கும் 'அக்கா' என்ற வெப் தொடர் வருகிற 30ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்தியில் தயாராகி உள்ள இந்த தொடர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. யஷ் ராஜ் பிலிம்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளன. தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ளார்.
தன்வி அஸ்மி, மகேஷ் மஞ்ரேக்கர், அன்ஷூமான் புஷ்கர், மோனிகா பன்வார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆண்கள் இன்றி பெண்கள் மட்டுமே இருக்கும் ஒரு ஜமீன் ராஜ்யத்தை வில்லன்கள் திட்டமிட்டு கைப்பற்ற நினைப்பதும், அதை பெண்கள் தங்கள் அறிவாலும், வீரத்தாலும் தடுப்பதும்தான் கதை என்கிறார்கள்.
இந்த தொடர் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது: 1980களின் பின்னணியில், பெண்களை மையமாக கொண்ட கேங்ஸ்டர் கதை இது. தென்னிந்தியாவில் இருக்கும் பெர்னூர் என்ற கற்பனை நகரத்தை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பவானியாக நானும் ருத்ராவாக ராதிகா ஆப்தேவும் நடித்துள்ளோம்.
'தமிழில் 'சாணிக் காயிதம்' என்ற தனித்துவமான ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தேன். அதில் எனது கேரக்டரில் அதிக வன்முறை இருந்தது. 'அக்கா' தொடரில் பவானி ஒரு அமைதியான மற்றும் நிதானமான கேங்ஸ்டராக வருகிறேன். இதுபோன்ற தனித்துவமான கதையில் நான் நடித்ததில்லை. இது ஒரு புது உலகம். இத்தொடரில் நான் கேங்ஸ்டர்களாக தோன்றினாலும் எனக்கென்று ஒரு பாரம்பரியமும் அதற்கேற்ற உடையும், உடல்மொழியும் இருக்கும். அந்த பகுதியை ஆட்சி செய்யும் அரச குடும்பத்தை சேர்ந்த கேங்ஸ்டர் என்ற புதிய களத்தில் தொடர் தயராகி உள்ளது. என்றார்.