தமிழில் அறிமுகமாகும் கல்யாணி அனில்
மோட்டிவேஷன் புரொடக்ஷன் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரித்துள்ள படம் 'குட் நியூஸ்'. இந்த படத்தில் ஜெயராமும், அஸ்வினும் இணைந்து நடித்துள்ளனர். கேரளாவில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் கல்யாணி அனில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன்பு 'டிஸ்கோ' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சில மியூசிக் ஆல்பங்களிலும் ஆடியிருக்கிறார்.
இவர்களுடன் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்குகிறார். படத்தின் வசனங்களை பாண்டிராஜ் எழுதியுள்ளார். பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சித்து குமார் இசையமைக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது “குடும்ப உணர்வுகள் மற்றும் நம் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய மனித உறவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை, பாசம், உணர்ச்சிகரமான தருணங்கள் எனப் பல அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும்” என்கிறார்.