உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஜெர்மன் ரீமேக்கில் நடித்த சிவாஜி

பிளாஷ்பேக்: ஜெர்மன் ரீமேக்கில் நடித்த சிவாஜி


நடிகர் திலகம் சிவாஜி, ஹாலிவுட், அமெரிக்கன் மற்றும் பிரஞ்ச் படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார். அந்த வகையில் புகழ்பெற்ற ஜெர்மன் படமான 'தி புளூ ஏஞ்சல்' என்ற படத்தின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். 1930ம் ஆண்டு வெளியான இந்த ஜெர்மன் படம் உலக புகழ்பெற்றது. 'புரபசர் அர்னாட்' என்ற ஜெர்மன் நாவலை தழுவி உருவான படம்.

இந்த படத்தை தமிழில் 'ஆண்டவன் கட்டளை' என்ற பெயரில் ரீமேக் செய்தனர். ஜெர்மன் படத்தின் கதையின் கருவை மட்டும் வைத்துக் கொண்டு திரைக்கதையை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதினர். கே.சங்கர் இயக்கினார். பி.எஸ்.வீரப்பா தயாரித்தார். சிவாஜியுடன் தேவிகா, ஏவிஎம் ராஜன், புஷ்பலதா, பி.எஸ்.வீரப்பா, அசோகன், பாலாஜி, சந்திரபாபு நடித்தனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்தனர்.

ஒரு படகு பயணத்தில் காதலன் சிவாஜியும், காதலி தேவிகாவும் செல்லும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் தேவிகா காணாமல் போகிறார். அவரை சிவாஜிதான் கொன்று விட்டார் என்று கருதி போலீஸ் கைது செய்கிறது. ஆனாலும் தேவிகாவின் உடல் கிடைக்காததால் கோர்ட் அவரை விடுதலை செய்கிறது. ஆனால் முன்பு உயர்வாக மதித்த சமூகம் இப்போது சிவாஜியை கொலைகாரனாக பார்க்கிறது. இதற்கிடையில் காணாமல் போன தேவிகா தனது பழைய நினைவுகளை இழந்தவராக சிவாஜியிடமே வந்து சேர்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

இந்த படம் தியேட்டர்களில் 70 நாளை கடந்து ஓடிக் கொண்டிருந்தபோது 'புதிய பறவை' படம் வெளிவந்தது. அது மிகப்பெரிய வெற்றி பெறவே தியேட்டர்காரர்கள் 'ஆண்டவன் கட்டளை'யை தூக்கி விட்டு 'புதிய பறவை'யை திரையிட்டது அப்போது சர்ச்சையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !