உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடும் தீபாவளி போட்டி, மீண்டும் தள்ளிப் போகிறதா 'அப்பா குட்டி' ?

கடும் தீபாவளி போட்டி, மீண்டும் தள்ளிப் போகிறதா 'அப்பா குட்டி' ?


2026ம் வருடத்தின் தீபாவளியை முன்னிட்டு சூர்யா நடித்துள்ள 'சீன்', நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2', பிரபுதேவா நடித்துள்ள 'மூன் வாக்', விஜய் ஆண்டனி நடித்துள்ள 'அப்பா குட்டி' ஆகிய படங்கள் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'ராமாயணா' ஹிந்திப் படமும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த 'கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வசூலைத் தந்ததால் சூர்யா நடித்துள்ள 'சீன்' படத்தைத் திரையிட தியேட்டர்காரர்கள் அதிகம் விரும்புவதாகச் சொல்கிறார்கள். அதற்கடுத்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்கலாம்.

பிரபுதேவா நடித்துள்ள 'மூன்வாக்' படம் பற்றிய சமீபத்திய அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்துள்ள 'அப்பா குட்டி' படத்தை முதலில் அக்டோபர் 16 அன்று வெளியிடுவதாக அறிவித்து, பின்னர் நவம்பர் 6ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்கள்.

'சீன், மூக்குத்தி அம்மன் 2' ஆகிய படங்களுடன் சேர்ந்து போட்டியிடாமல் தனியாக வந்தால் 'அப்பா குட்டி' படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என திரையுலகில் உள்ளவர்கள் விஜய் ஆண்டனிக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்களாம். அதை ஏற்றுக் கொண்ட விஜய் ஆண்டனி படத்தை வேறு தேதிக்குத் தள்ளி வைக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !