துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா பவன் கல்யாண்?
கடந்த 24 மணி நேரமாக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியிலிருந்து விலகத் தயாராகி வருவதாக, துணை முதலமைச்சர் அலுவலகம், ஆந்திரப் பிரதேசம் என்ற பெயரிலான வாட்ஸ்அப் சேனல் ஒன்று இதுபோன்ற தகவல்களைப் பரப்பி வந்தது. இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த பதிவுக்கு தற்போது பவன் கல்யாணின் அலுவலகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
பவன் கல்யாணின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அங்கீகரிக்கப்படாத சேனல், அலுவலகத்தின் பெயரையும் அடையாளத்தையும் தவறாகப் பயன்படுத்தி தவறான தகவல்களையும் தேவையற்ற உள்ளடக்கங்களையும் பரப்புவதாகத் தெரிவித்துள்ளது.
இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்து, திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு காரணமானவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் அரசியலில் நுழைந்து ஜனசேனா கட்சியை நடத்தி வருகிறார். 2024 தேர்தலில் அக்கட்சி 21 சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரானார். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசில் அவர் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.