உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெத்லகேம் குடும்ப யூனிட் : பாராட்டிப் பதிவிட்ட கேரள முதல்வர்

பெத்லகேம் குடும்ப யூனிட் : பாராட்டிப் பதிவிட்ட கேரள முதல்வர்

கிரிஷ் இயக்கத்தில், நிவின் பாலி, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 21ல் வெளியான மலையாளப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 330 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மலையாளத் திரையுலகத்தில் இதுவரையில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற சாதனையும் புரிந்தது.

இப்படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. கேரள மாநில முதல்வர் சதீஷன் இப்படத்தைப் பார்த்து நேற்று அவரது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், “மாதத்திற்கு ஒரு படமாவது பார்க்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வேலைப்பளு காரணமாக அது தடைபட்டுப் போயிருந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு நேற்றைய தினம் தான் ஒரு படத்தை உட்கார்ந்து பார்த்தேன். மகள் அவரது தோழியுடன் சேர்ந்து அளவுக்கு மீறிய ஆனந்தத்துடன் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தைப் பார்த்து முடித்தேன்.

டிரீட்மென்ட்டில் தான் இந்தப் படம் வித்தியாசமாகிறது. ஒரு சிறு அளவு கூட சலிப்பு ஏற்படவில்லை. என் சிறுவயதோடு உடனடியாக இணைந்து கொள்ள முடிந்தது. அந்தக் காலத்தில் நாங்கள் பார்த்த கிராமங்கள், அங்கிருந்த மக்கள், அங்கே பார்த்த சாதாரண வாழ்க்கை, அவர்களுக்கிடையிலான அன்பு, வெதுவெதுப்பான காதல்கள்… இவை அனைத்தும் சேர்ந்து என்னைப் படத்திலேயே உட்கார வைத்தது. பார்த்து முடித்த பிறகு, “ஏன் பார்க்க தாமதமானது ?” என்று தான் நினைத்தேன்.

நாயகன், நாயகி என்று சொல்லக்கூடிய கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் வருபவர்கள் கூட தங்கள் இருப்பை உணர்த்தினார்கள். நன்றாக சிரிக்க வைத்தது… இடையில் சில நேரங்களில் வருத்தப்பட வைத்தது… ஆரம்பம் முதல் இறுதி வரை நன்றாக அனுபவித்தேன். இது ஒரு முழுமையான டீம் வொர்க் படம்.

ஒரு படம் பார்த்து அதைப் பற்றிய அனுபவக் குறிப்பை எழுதுவது வழக்கம் இல்லை. ஆனால் இவ்வளவு ஆனந்தமாக அனுபவித்ததாலும், புத்துணர்ச்சி அடைந்ததாலும் தான் எழுத வேண்டும் என்று தோன்றியது.

இயக்குநர் ஏ.டி. கிரிஷையும், நடிகர் சங்கீத் பிரதாபையும் போனில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நிவின் பாலியையும், மமிதா பைஜுவையும் போனில் அழைக்க முடியவில்லை. இவர்களோடு என் மனதில் இடம் பிடித்த ஒருவர் க்ளிக்ஸன். பரிதாபமான க்ளிக்ஸன்.

இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !