'ராமாயணா' படத்திற்கு ராஜமவுலி வாழ்த்து
இந்தியத் திரையுலகத்தில் பிரமாண்டம் என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதை தனது 'பாகுபலி' படங்களின் மூலம் காட்டியவர் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி. தற்போது மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிக்கும் 'வாரணாசி' படத்தை இயக்கி வருகிறார்.
இந்தியத் திரையுலகத்தில் அடுத்த முழுமையான பிரம்மாண்டப் படம் என்ற எதிர்பார்ப்பை ஹிந்திப் படமான 'ராமாயணா' பாகம் 1 ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 5ம் தேதி இப்படம் பான் வேர்ல்டு படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் புதிய டிரைலர் ஒன்றையும் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர்.
இப்படத்தின் புதிய டிரைலரைக் பகிர்ந்து இயக்குனர் ராஜமவுலி, “'ராமாயணம்' என்பது ஒவ்வொரு இந்தியக் கதை சொல்பவரும் வளர்ந்து வரும்போது, ஒரு முறையாவது சொல்ல விரும்பும் ஒரு கதையாகும். நிதேஷ் திவாரி மற்றும் நமித் மல்ஹோத்ரா ஆகியோர் இக்கதையை இவ்வளவு பிரமாண்டமான அளவில் திரைக்குக் கொண்டு வருவதைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு நடிகரும் இந்தக் கதாபாத்திரங்களுக்கு காலத்தால் அழியாத ஆழமான உயிர் கொடுத்துள்ளனர்.
நவம்பர் 5ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.