உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛தேனிசை தென்றல்' என கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவா காலமானார்

‛தேனிசை தென்றல்' என கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவா காலமானார்

சென்னை : தமிழ் சினிமாவில் ‛தேனிசை தென்றல்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவா, 75 காலமானார். திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை சுமார் 8:30 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது.

1986ல் வாகை சந்திரசேகர் நடித்து வெளிவந்த மாட்டுக்கார மன்னாரு படம் தான் இசையமைப்பாளர் தேவாவிற்கு முதல்படம். ஆனால் 1989ல் வெளிவந்த ‛மனசுக்கேத்த மகராசா' என்ற படம் தேவாவை அடையாளப்படுத்தியது. பின்னர் பிரசாந்த் நடித்த ‛வைகாசி பொறந்தாச்சு' படம் அவரை பிரபலமாக்கியது. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் அனேக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர் தேவா. 450க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். குறிப்பாக ரஜினி டைட்டில் கார்டில் வரும் பிஜிஎம் இசையை தந்தவர் தேவா. கடைசியாக ஒய்ஜி மகேந்திரன் நடித்த ‛சாருகேசி' படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இவரது திடீர் மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அஞ்சலி
இசையமைப்பாளர் தேவா உடல் சென்னை, தி நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். நாளை மாலை இறுதிச்சடங்கு தேவாவின் சொந்த ஊரான ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மரியாதை
இசையமைப்பாளர் தேவாவின் மறைவையொட்டி அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !