'ராமாயணா' படத்தில் சின்ன சின்ன விஎப்எக்ஸ் குறைகளை கண்டுக்காதீங்க: யஷ் பேச்சால் சலசலப்பு
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் 'ராமாயணா'. புகழ்பெற்ற ராமாயணம் இதிகாசத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரு பாகங்களாக ரிலீசாகிறது. முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரிலீசாகிறது. படத்தில் பிரமாண்டத்தை கண்முன்னே காட்டுவதற்காக விஎப்எக்ஸ் (VFX), கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அதிகம் மெனக்கெட்டுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற நடிகரும், இப்படத்தின் இணை தயாரிப்பாளருமான யஷ் பேசுகையில், ''படத்தில் தயவுசெய்து சிறிய குறைகளை தேடாதீர்கள்; விஎப்எக்ஸ் போன்ற காட்சிகளில் உள்ள பிழைகளை பெரிதுப்படுத்த வேண்டாம். இது போன்றதொரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது, பல ஆண்டுகளுக்குக் கிடைக்காது. நிதேஷ் திவாரி போன்ற ஒரு கலைஞரை நாம் இப்போது இழந்துவிட்டால், மீண்டும் பின்னோக்கிச் சென்றுவிடுவோம். எனவே, ஒரு திறந்த மனதுடன் இந்தப் படத்தைப் பார்ப்போம். அவர் எப்போதும் சரியான நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகிறார்; முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டு, எப்போதும் தனது சிறந்த பங்களிப்பை வழங்கவே முயற்சித்துள்ளார்.
அனைத்து ரசிகர்களிடமும், குறிப்பாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் இந்தித் திரையுலக ரசிகர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த முறை, உங்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தால், அனைவரும் ஒன்றிணைந்து அதை உலகிற்கு எடுத்துச் செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஒரு படத்தில் பிரமாண்டத்தையே ரசிகர்கள் எதிர்பார்த்து வருவார்கள். அப்படியான சூழலில் அந்த பிரமாண்டத்தை சிறப்பாக காட்ட, விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகளை துல்லியமாக காட்டினாலே போதும். இதே ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்ட 'ஆதிபுருஷ்' படத்தில் கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகள் சரியாக செய்யாததே படத்திற்கான மிகப்பெரிய மைனஸ் ஆனது. இந்த பட்ஜெட்டில் உருவான அவதார் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்கள் தரமாக எடுத்த நிலையில், யஷ் கூறிய கருத்தால், படத்தில் விஎப்எக்ஸ் சொதப்பியிருப்பார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பட வெளியீட்டிற்கு முன்பாக அதனை சரி செய்வார்களா அல்லது இதுவும் படத்தின் புரமோஷனுக்கான யுக்தியா என்பது ரிலீசுக்கு பின்னரே தெரியவரும்.