ஓடிடியில் வெளியான பிறகு அதிக அளவு தாக்குதலுக்கு ஆளாகும் பார்வதியின் படம்
நடிகை பார்வதி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் 'பிரதம திருஸ்திய குட்டக்கார்' என்கிற படம் வெளியானது. பார்வதி முதன்முறையாக இதில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருடன் உன்னிமாயா பிரசாத், மேத்யூ தாமஸ், சித்தார்த் பரதன் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்தை ஷஹாத் நிலம்பூர் என்பவர் இயக்கியிருந்தார். படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பு என்று இல்லாவிட்டாலும் ஓரளவு சுமாரான வசூலை பெற்றது. அதே சமயம் படம் குறித்த சில சலசலப்பான கேள்விகளும் எழுந்தன. அதற்குள்ளாகவே படம் ஓடி முடிந்து தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
ஆனால் ஓடிடியில் பார்த்த பிறகு படக்குழுவினரை குறிப்பாக இயக்குனரை நோக்கி நிறைய விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. சில குறைகள் சுட்டிக் காட்டப்பட்டு கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பேசிய இயக்குனர் ஷஹாத், “ஓடிடி வெளியீட்டுக்கு பிறகு இதுபோன்ற சில விமர்சனங்கள் வரும் என்பதை நான் முன்பே எதிர்பார்த்தேன். ஒரு இயக்குனராக சில படைப்பு சுதந்திரங்களை நான் பயன்படுத்தினேன். இது ஆவணப்படமும் அல்ல, முழுக்க முழுக்க உண்மை சம்பவமும் அல்ல.. காட்சிகளை சுவாரசியமாக மாற்ற இந்த சுதந்திரத்தை பயன்படுத்தினோம்.
கதையை மிகத் துல்லியமாக விளக்கி அதைப் பார்வையாவர்களுக்கு வழக்கமான ஸ்பூன் பீடிங் பாணியில் புகட்ட விரும்பவில்லை. ஆனால் அப்படி செய்யாமல் விட்டதுதான் பார்வையாளர்களை தவறாக கணித்து விட்டோம் என்ற முடிவுக்கு எங்களை தள்ளியது” என்று ஒப்புக்கொண்டுள்ளார். அதேசமயம் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கான விடைகள் ஏற்கனவே திரைப்படத்தில் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,