தென்மாவின் கொம்பத்து ரீ ரிலீஸ் பார்ப்பதற்காக கேரளா சென்ற நடிகை சோனியா
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு நகைச்சுவை நடிகையாக பல படங்களில் நடித்தவர் நடிகை சோனியா. நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவியும் கூட. கடந்த 32 வருடங்களுக்கு முன்பு மோகன்லால், ஷோபனா நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான தென்மாவின் கொம்பத்து திரைப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் சோனியாவும் குயிலி என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளதை தொடர்ந்து கேரளாவிற்கு சென்று இந்த படத்தை பார்த்துள்ளார் சோனியா.
இந்த படத்தின்போது நடைபெற்ற சுவாரசிய விஷயங்கள் குறித்து சோனியா கூறும்போது, இதில் என்னுடைய சில காட்சிகள் எடிட்டிங்கில் தூக்கப்பட்டு விட்டன. குறிப்பாக நடிகர் சீனிவாசன் என்னை ஏதாவது செய்ய வரும்போது மோகன்லால் என்னை வந்து காப்பாற்றும் விதமாக பிடிக்கும் ஒரு காட்சி படத்திலிருந்தது. அது ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை காட்சியாக மாறி இருக்கும். ஆனால் அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது. அதே சமயம் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். என் வாழ்நாளில் அந்த ஒரு படம் போதும்” என்று அவர் கூறியுள்ளார்.