என் நேர்மை சிலருக்கு அகம்பாவமாக தெரிந்தால் நான் என்ன செய்வது - விஜய் தேவரகொண்டா காட்டம்
தெலுங்கு இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'ரணபாலி' திரைப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 16ம் தேதி வெளியாகிறது. அவரது காதல் மனைவியான ராஷ்மிகா மந்தனா, திருமணத்திற்கு பிறகு மீண்டும் அவருடன் இந்தப் படத்தில் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி காலகட்டத்தில் நடைபெறும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் வெளியாவது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்குக் காட்டமாகவே பதிலடி கொடுத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
இது குறித்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய விஜய் தேவரகொண்டா, எனது நேர்மை அவர்களுக்கு அகம்பாவமாகவும், எனது தன்னம்பிக்கை அவர்களுக்கு ஆணவமாகவும் பட்டால் நான் என்ன செய்ய முடியும்? என் பயணம் அவர்களுக்குப் புரியவில்லை என்பதற்காக நான் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டுமா? நான் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன்; மாற வேண்டியவர்கள் அவர்கள்தான். மற்றவர்களை கீழே இழுக்க முயற்சிப்பதை விட்டுவிட்டுத் தங்களின் சொந்த வாழ்க்கையை அவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சற்று கோபமாகவே பேசியுள்ளார்.