உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஸ்ட்ரீட் பைட்டர்' பட நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால்

'ஸ்ட்ரீட் பைட்டர்' பட நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால்

பாலிவுட்டின் பிரபல நடிகர் வித்யுத் ஜம்வால். ஹீரோ, வில்லன் என நடிக்கிறார். தமிழில் பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ஸ்ட்ரீட் பைட்டர்' என்ற ஹாலிவுட் படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தால்சிமின் வல்லமை யோகா மற்றும் இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் இப்படம் கொண்டது.

மும்பையில் நடைபெற்ற இப்பட விழாவில் தால்சிம் வேடமிட்ட காஸ்பிளேயர்ஸூடன் மேடையில் அமர்ந்து தொடர்ந்து 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி, தனது யோகக்கலை திறமையை நிரூபித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பதஞ்சலி யோக சூத்திரத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு நுட்பத்தை பயன்படுத்தினேன். இந்த நுட்பம் 15 நிமிடங்கள் மூச்சை அடக்குவதற்கு மட்டுமின்றி, வாழ்க்கையில் பல்வேறு உயரங்களை அடையவும் எனக்கு உதவியது. இந்த நுட்பத்தை இளம் தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுத்து வருகிறேன். எந்தவொரு விஷயமும் முழுமையான பலனை அடைய காலம் தேவைப்படும். தொடர் முயற்சியால் நமது இலக்கை அடைய முடியும். நான் இதை அடைய எனக்கு ஒரு காலம் தேவைப்பட்டது. நம்மைச் சுற்றியிருக்கும் அனைவரும் எதை நோக்கியாவது தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதுவும் செய்யாமல் நிதானமாக இருங்கள். அந்தத் திறமை உங்களை வாழ்க்கையில் வெகுதூரம் அழைத்துச் செல்லும். இதைத்தான் இளம் தலைமுறையினருக்கு சொல்ல விரும்புகிறேன்'' என்றார்.

பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடும் 'ஸ்ட்ரீட் பைட்டர்' திரைப்படம், அக்டோபர் 16ம் தேதி இந்தியா முழுவதும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !