'இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்': அக்.11ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் அக்டோபர் 11ம் தேதி சென்னை வருகிறார். பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் சேவையைத் துவக்கிவைத்து, மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு வருகிறார்.
சென்னை ஐஐடி.,யில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, அந்த வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அதே வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சாா்பில் கடந்த 2024ம் ஆண்டு 'இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்' அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இம்மையம் தற்போது நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி அக்.,11ல் திறந்து வைக்கிறார்.