மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது ஒரு வரம்: பாக்யஸ்ரீ போர்ஸ் நெகிழ்ச்சி
தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். தமிழில் 'காந்தா', தெலுங்கில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'லெனின்' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், முதன்முறையாக 'ஆபரேஷன் கங்கா' என்கிற படத்தில் நடிப்பதன் மூலம் மலையாளத் திரை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். விஷ்ணு மோகன் இயக்கத்தில் ராணுவ பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீப நாட்களாக ஜார்ஜியாவில் நடைபெற்றது.
இந்தப் படப்பிடிப்பில் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றியபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாக்யஸ்ரீ போர்ஸ், அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, அன்பான லால் சார், உங்களது இணை நடிகராக இருப்பது ஒரு வரமாகத் தோன்றுகிறது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் உங்கள் கண்கள் வழியே சினிமாவைப் பார்ப்பதற்கும், உங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் உண்மையிலேயே ஒரு அற்புதமான கலைஞர் சார் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.