உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பஹத் பாசிலின் டோன்ட் டிரபிள் தி டிரபிள் படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

பஹத் பாசிலின் டோன்ட் டிரபிள் தி டிரபிள் படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

ஷஷாங்க் யேலேட்டி இயக்கத்தில் பஹத் பாசில் நேரடியாக தெலுங்கில் நடித்துள்ள படம் டோன்ட் டிரபிள் தி டிரபிள். இப்படம் அக்டோபர் 2ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. ஆர்கா மீடியா வொர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் சோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி வழங்குகிறார். இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்வில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்து கொண்டது படத்திற்குப் பெரிய பலமாக அமைந்த நிலையில், தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் ஆதரவும் கிடைத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, டோன்ட் டிரபிள் தி டிரபிள் படத்தின் சிறப்புத் திரையிடலைப் பார்த்த மகேஷ் பாபு, இது ஒரு அழகான அனுபவம் என எக்ஸ் தளத்தில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட, மகிழ்ச்சியளிக்கும் திரைப்படம். ஒரே நேரத்தில் முழுமையான பொழுதுபோக்கையும், ஆழமான நெகிழ்ச்சியையும் தருகிறது. படம் முழுவதும் ஒரு அரிய வாழ்வியல் கதகதப்பு நிறைந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும், பஹத் பாசில் மற்றும் சாரா ஆகிய இருவரின் கூட்டணியும் பிரமாதமாக உள்ளதாகவும், பகத் தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்று அனைவரையும் ஊக்கப்படுத்துவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கார்த்திகேயாவின் முதல் தயாரிப்பு முயற்சிக்கு டோன்ட் டிரபிள் தி டிரபிள் படத்தை விட சிறந்தது எதுவுமே அமைந்திருக்க முடியாது என்று கூறிய மகேஷ் பாபு, ஒரு மிகச் சிறந்த படைப்பை உருவாக்கியதற்காக முழு படக்குழுவையும் பாராட்டியுள்ளார். இந்த நட்சத்திரங்களின் ஆதரவு பாக்ஸ் ஆபீஸில் இப்படத்தின் வசூலுக்கு உதவுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !