உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஆடுகளம்' நல்லா இருக்கு.... ஆனால் பஞ்சாயத்துகளால் பரிதவிக்கும் தனுஷ் களம்

‛ஆடுகளம்' நல்லா இருக்கு.... ஆனால் பஞ்சாயத்துகளால் பரிதவிக்கும் தனுஷ் களம்

' ஓட்டு கேட்டு வந்தப்போ பார்த்தது… அடுத்து ஆளையே காணோம்' என்று ஓட்டுப்போட்ட தொகுதி மக்கள் எம்.எல்.ஏ.க்களை தேடுவதுபோல், ' அட்வான்ஸ் வாங்குனார். கால்ஷீட் கேட்டுப்போறப்போ காணாமப் போயிறார்' என்று தயாரிப்பாளர் சங்க ஆலமரத்தடி பஞ்சாயத்துகளில் அடிக்கடி அடிபடும் பெயர் தனுஷ். அப்படி லேட்டஸ்டாக நடந்த பஞ்சாயத்தில் பழைய செட்டில்மென்ட்களை மதித்து நடந்து கொள்ளாததால் அவர் புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பே தனுஷை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கவேண்டிய இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, தனுஷின் 56வது பட அப்டேட் குறித்து அவரது ரசிகர்கள் கொடுத்த நச்சரிப்புக்கு… இனி சீன் பேப்பரைத்தான் அப்லோட் பண்ணனும்' என்று விரக்தியான பதில் கொடுக்கும் அவலநிலை.

'ஆடுகளம்', 'அசுரன்', படங்களுக்குப் பிறகு நேற்று மூன்றாவது முறையாக 'கேப்டன் மில்லர்' படத்துக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் தனுஷுக்குத்தான் இப்படி ஒரு சோகக் காட்சி. இக்காட்சியை அரங்கேற்றியிருப்பவர்கள் பிரபல தயாரிப்பாளர்களான பைவ் ஸ்டார் கதிரேசனும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியும்.

இருவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்திருந்த கால்ஷீட்டை தனுஷ் ரத்து செய்திருந்த நிலையில் அதற்கு பதிலாக, வட்டியுடன் சேர்த்து சில கோடிகள் நஷ்ட ஈடு கொடுக்க சம்மதித்திருந்தார். அந்த நஷ்ட ஈடு என்பது தனுஷைப் பொறுத்தவரை இன்றைய சம்பளத்தோடு ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்குதான். ஆனால் என்ன காரணத்தாலோ சொன்ன தொகையை தனுஷ் செலுத்தாமல் இழுத்தடிக்கவேதான் மீண்டும் பஞ்சாயத்து கூட்டி இம்முறை கடும் நெருக்கடி கொடுத்து படப்பிடிப்பையே நிறுத்தியிருக்கிறார்கள்.

பஞ்சாயத்து கூடுவதற்கு சில தினங்கள் முன்பு லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இந்நிலையில், அந்தப்படக்குழுவைத் தொடர்பு கொண்ட தொழிலாளர்கள் சம்மேளனம், உங்கள் படத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டாமென தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது. எனவே, அவர்களிடம் தடையில்லாச் சான்று வாங்கினால்தான் நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.

இந்த திடீர் அட்டாக்கை எதிர்பாராமல் திடுக்கிட்டுப்போன தனுஷ், உடனடியாக நடிகர் சங்கத்தை அணுகி இச்சிக்கலைத் தீர்க்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசுகிறோம் என்று சொன்ன நடிகர் சங்க நிர்வாகிகள், 'கதிரேசனுக்கும் , முரளிக்கும் செட்டில் பண்ணிட்டு ஷூட்டிங் கிளம்புற வழியைப் பாருங்க' என்றே தனுஷ் தரப்புக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

படத்துக்கு 50 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் தனுஷுக்கு ஒருநாள் படப்பிடிப்பு ரத்தானாலே கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் என்கிற நிலையில் இந்தத் தடையை உடைத்து எப்போது படப்பிடிப்புக்குத் திரும்புவார் என்று அவரை நம்பிக் காத்திருப்போர் கன்னத்தில் கைவைத்துக் காத்திருக்கிறார்கள்.

ஆனால் தனுஷுக்கு எதிர்தரப்போ, பிரச்னையையே பெட்ஷீட்டா போர்த்திட்டு தூங்குற மாதிரி தனுஷுக்கு இன்னும் பல பஞ்சாயத்துகள் காத்திருக்கு. வருஷத்து நாலு படம் தான் பண்ணமுடியும்னு தெரிஞ்சும் பத்துப் படங்களை கமிட் பண்ணி அட்வான்ஸ்களை வாங்கிக் குவிக்கிறார். ஸோ அவருக்கு அவருக்கு ஆலமரத்தடிப் பஞ்சாயத்துகள் காலம்பூரா இருந்துக்கிட்டே இருக்கும் என்கிறார்கள். கொஞ்சம் போங்குதான் எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.

வெற்றிமாறனுடன் 'தமிழ் முருகன்', அண்ணன் செல்வராகனுடன் 'புதுப்பேட்டை 2', 'ஆயிரத்தில் ஒருவன்2', மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படம், விக்னேஷ் ராஜா படம், சஞ்சய் பன்சாலியுடன் ஒரு இந்திப்படம், இவர்கள் போக நெல்சன், ஹெச்.வினோத், சிறுத்தை சிவா, அப்துல் கலாம் பயோபிக், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'இளையராஜா பயோபிக்… என்று டஜனுக்கும் மேற்பட்ட படங்களை குவித்து வைத்திருக்கிறார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் புதிய இயக்குநர்கள் யாராவது அதிரடி வெற்றிப்படம் கொடுத்தால் முதல் ஆளாக அவரை தன் கஸ்டடிக்குக் கொண்டு வருவதையும் தனது வாடிக்கையாக வைத்திருக்கிறார் தனுஷ்.

தமிழ் சினிமா ஆடுகளம் முற்றிலும் தனுஷுக்கு சாதகமாக இருக்கும் சூழலில் குழப்பங்கள் தவிர்த்து, பஞ்சாயத்துக்களுக்கு இடம் தராமல் நம்பர் ஒன் இடத்தை நோக்கி தனுஷ் பயணிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !