'ஜனநாயகன்' படம் லீக் ஆன விவகாரம் : படத்தொகுப்பாளர் மீதான குண்டர் சட்டம் ரத்து
சென்னை : இணையத்தில் ஜனநாயகன் படம் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட படத்தொகுப்பாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
முதல்வர் விஜய் சட்டசபை தேர்தலுக்கு முன் நடித்த ஜனநாயகன் படம் மத்திய தணிக்கை வாரிய மறு ஆய்வுக்குழு முன்பு இருந்தது. ஏப்.3ம் தேதி இந்த படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது.
அதிர்ச்சி அடைந்த பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தது. இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேர படத்தொகுப்பாளரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமாசங்கர் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிறையில் அடைத்து மாநகர போலீஸ் கமிஷனர் ஜூலை 30ம் தேதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, அவரின் சகோதரி ரேணுகா தேவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில் தனது சகோதரர் துணிக்கடையில் பணியாற்றுபவர், சினிமா எடிட்டர் இல்லை. எனவே அவர் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, உமாசங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.