அவதூறு கருத்துக்கள் : இடைக்காலத் தடை உத்தரவு பெற்ற 'தி பாரடைஸ்'
ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான 'தி பாரடைஸ்' படம் நாளை மறுதினம் செப்டம்பர் 24ம் தேதி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு எந்தவிதமான தவறான, அவதூறு கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பக் கூடாது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது.
படத் தயாரிப்பு, மார்க்கெட்டிங், வினியோகம் என இப்படத்திற்காக பெரும் தொகையை முதலீடு செய்துள்ளதாகவும், இப்படத்தின் டீசர் வெளியான பிறகு தவறான, தரக் குறைவான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் முறையிட்டுள்ளார்கள். அது நியாயாமான விமர்சனத்தின் வரம்பைக் கடந்து திரையரங்க வெளியீட்டிற்கு முன்பாக படத்தின் வணிகத்தை பாதிக்கக் கூடிய வகையில் திட்டமிட்ட அவதூறுக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்கள். அதற்குரிய ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள்.
அதன்பின் நீதிபதி இதற்கான இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அடுத்த கட்ட விசாரணையான அக்டோபர் 28 வரை இந்தத் தடை உத்தரவு நீடிக்க உள்ளது.
இதற்கு முன்பு 'டாக்சிக்' மற்றும் சில கன்னடப் படங்களான 'தி டெவில், மார்க், 45' ஆகிய படங்களுக்கும் இது போன்ற இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றிருந்தனர். அதனால், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இணையதளங்களில் படத்திற்கான கமெண்ட்டுகள், ஸ்டார் ரேட்டிங்குகள் எதுவும் இடம் பெறவில்லை.