உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அம்பிகா - ராதா சகோதரிகளின் சண்டை, ஆச்சரியத்தில் ரசிகர்கள்

அம்பிகா - ராதா சகோதரிகளின் சண்டை, ஆச்சரியத்தில் ரசிகர்கள்


தமிழ் சினிமாவிலும் தினமும் ஏதாவது ஒரு சர்ச்சை செய்தி வருவதும், அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு கமெண்ட்டுகள் இடம் பெறுவதும் வாடிக்கையாகிவிட்டது.

80களில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்கள் அம்பிகா, ராதா சகோதரிகள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ், பிரபு என தமிழில் மட்டுமல்லாது, அவர்களது தாய் மொழியான மலையாளம், மற்றும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்கள்.

அவர்களது சகோதரர் ராம் அர்ஜூன் என்ற பெயரில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'புது நெல்லு புது நாத்து' படத்தில் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில்தான் சுகன்யா, நெப்போலியன் ஆகியோரும் அறிமுகமானார்கள். அதன்பின் ராம் அர்ஜூன், 'வைதேகி கல்யாணம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சென்னை, வளசரவாக்கத்தில் அம்பிகா, ராதா, அவர்களது அம்மா சரசம்மா ஆகியோரது பெயரைத் தாங்கிய ஏஆர்எஸ் கார்டன் என்ற படப்பிடிப்புத் தளத்தை பல வருடங்களுக்கு முன்பே நடத்தி வந்தார்கள். அங்கு பல படங்களின் கிராமத்துக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

மிகவும் ஒற்றுமையாக இருந்த அந்தக் குடும்பத்தின் சொத்து தகராறு உள்ளிட்ட குடும்ப விஷயங்கள் ராதா நேற்று அளித்த புகார் மூலம் வெளியுலகிற்கு வந்துள்ளது. அம்பிகா, ராதா இருவரும் இணைந்து கூட சில படங்களில் நடித்துள்ளனர். இருவரும் ஒரே கால கட்டத்தில் சினிமாவில் வளர்ந்தனர். அவர்களுக்கிடையேயான பாசம், நேசம் திரையுலகினல் அறிந்த ஒன்று.

அந்தக் காலத்தில் லலிதா, ராகினி, பத்மினி என கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சகோதரி நடிகைகள் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றதைப் போல அம்பிகா, ராதா புகழ் பெற்று விளங்கினார்கள்.

தற்போதைய அவர்களது குடும்ப சண்டை நேற்று முதலே சமூக வலைதளங்களிலும், திரையுலகிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த குடும்ப விவகாரத்தை திரையுலகில் உள்ள அவர்களுக்கு நெருக்கமான சிலர் முயற்சித்து ஒரு தீர்வுக்குக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !