72வது தேசிய விருது பெற்ற தனுஷ், மம்முட்டி, ஜிவி பிரகாஷ் : ஆனந்த் நாக்கிற்கு தாதா சாகேப் விருது
குஜராத்தில் நடந்த 72வது தேசிய விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க, தனுஷ், மம்முட்டி, ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பெற்றனர். தாதா சாகேப் பால்கே விருதை கன்னட நடிகர் ஆனந்த் நாக் பெற்றார்.
இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கான தேசிய விருதை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கிறது. 2024ம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை 18ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவில் இருந்து நிறைய படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக ‛அமரன்' படத்திற்கு சிறந்த இயக்கம், பின்னணி இசை, படத்தொகுப்பு என 3 விருதுகள் அறிவிக்கப்பட்டன. தேர்வு குழுவின் சிறந்த நடிகராக ‛கேப்டன் மில்லர்' படத்திற்காக தனுஷ் தேர்வானார். தவிர சிறந்த தமிழ் படமாக தனுஷ் இயக்கி, நடித்த ‛ராயன்' படம் தேர்வானது. சமூக மாற்றத்திற்கான பட பிரிவில் ‛கேப்டன் மில்லர்' படம் தேர்வானது. மேலும் சிறந்த நடிகராக மம்முட்டி, கார்த்திக் ஆர்யன், நடிகையாக யாமி கவுதம், துணை நடிகையாக மகாராஜா படத்தில் நடித்த சாச்சனாவிற்கும் விருது அறிவிக்கப்பட்டது.
72வது தேசிய விருது விழா குஜராத்தின் எக்தா நகரில் இன்று நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, திரைக்கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார். தனுஷ், மம்முட்டி, கார்த்திக் ஆர்யன், யாமி கவுதம், ராஜ்குமார் பெரியசாமி, ஜிவி பிரகாஷ், சாச்சனா, அனல் அரசு, பாடகி வைக்கம் விஜயலட்சுமி, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உள்ளிட்ட 60க்கும் அதிகமான கலைஞர்கள் தேசிய விருதுகளை பெற்றனர்.
சிறந்த சண்டை பயிற்சி இயக்குநருக்கான தேசிய விருதை மகாராஜா படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்த அனல் அரசு பெற்றுக் கொண்டார். சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பிரம்மயுகம் படத்தின் கேமிராமேன் ஷெகனாத் ஜலாலுக்கு வழங்கப்பட்டது. இரண்டு விருதுகளை வென்று கல்கி 2898 ஏடி படம் தனது மகுடத்தில் மற்றொரு இறகையும் சேர்த்துள்ளது. சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருதையும், இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பு குழு சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதையும் வென்றுள்ளது.
தாதா சாகேப் விருது
இந்திய சினிமாவில் உயர்ந்த விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆனந்த் நாக்கிற்கு(78) வழங்கப்பட்டது. தங்கத்தாமரை விருதுடன் 15 லட்சம் ரொக்க பணமும் அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது. 50 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கேஜிஎப் 1 திரைப்படத்தில் அந்த கதையை விவரிக்கும் கதாபாத்திரத்தில் இவர் தான் நடித்தார்.
டில்லிக்கு வெளியே...
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா பல வருடங்களுக்குப் பிறகு டில்லிக்கு வெளியே நடைபெற்று உள்ளது. 1954 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் டில்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். 17வது மற்றும் 18வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. அதன்பின் இப்போது தான் டில்லியை விட்டு குஜராத்தில் நடந்துள்ளது.