உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமூக ஊடக 'டிரோல்' - சட்டையை கழற்றி சரவெடியாக வெடித்த சல்மான் கான்

சமூக ஊடக 'டிரோல்' - சட்டையை கழற்றி சரவெடியாக வெடித்த சல்மான் கான்


ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். படங்களில் நடிக்கும் போது அவரது கட்டு மஸ்தான உடலமைப்பைக் காட்டுவதற்காக சட்டையைக் கழற்றக் கூடிய காட்சிகள் அவரது படங்களில் வைப்பார்கள் என்ற பேச்சு உண்டு.

தற்போது அவர் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' டிவி நிகழ்ச்சியில் தனது சட்டையைக் கழற்றி அதிரடி காட்டி இருக்கிறார். சமீபத்தில் அவரது ஒரு தோற்றத்தைப் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் சல்மானுக்கு வயதாகிவிட்டதாக கமெண்ட் செய்திருந்தனர்.

அதற்காகத்தான் அவர் இப்படி சட்டையைக் கழற்றி, “இப்போது கமெண்ட் செய்யுங்கள்” என்று தனது எதிர்ப்பை ஆவேசமாகப் பதிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

மேலும், ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகையான கத்ரினா கைப்பின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கடுமையாக 'டிரோல்' செய்யப்பட்டது. அவரது தோற்றம் குறித்தான கமெண்ட்கள் அது.

அதற்கும் சேர்த்துப் பேசிய சல்மான் கான், “சமூக ஊடகங்களை அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள். ஒருவரை வம்பிழுப்பது, அவர்களின் தோல்வியைக் கொண்டாடுவது, என மக்கள் அதை ரசிக்கிறார்கள். நான் கூட ட்ரோல் (கேலி) செய்யப்பட்டேன். எனக்கு வயதாகிவிட்டது என்று அவர்கள் இப்பொழுதும் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். நிச்சயமாக, எனக்கு 60 வயது ஆகிறது. எல்லா நேரத்திலும் 'மெயின் பியார் கியா' (Main Ne Pyaar Kiya) படம் போலவே இருக்க முடியாது.

வயது என்பது திடீரென்று ஒரு பெரிய விஷயமாகிவிட்டது. கர்ப்பமடைந்த ஒருவரை நீங்கள் ஏன் கேலி செய்ய வேண்டும்? கர்ப்பத்திற்குப் பிறகு அனைவரும் உடல் எடை அதிகரிப்பது இயல்புதான். அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும்போது, தன் உடலமைப்பை மீட்டெடுப்பார். அவர் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்,” என்று கடும் கோபத்துடன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !