பிளாஷ்பேக்: நடிகர் விஜய்யின் குரலுக்கு, நடிகர் சூர்யா ஆடிப்பாடி நடித்திருந்த “பெரியண்ணா”
நடிகர் விஜய் தனது தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் மூலம் 1984ம் ஆண்டு நடிகர் விஜயகாந்த்தின் நடிப்பில் வெளிவந்த “வெற்றி” என்ற திரைப்படத்தில்தான்; ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து அவரது தந்தையின் இயக்கத்தில் வெளிவந்த மேலும் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தும் வந்தார். 1992ம் ஆண்டு வெளிவந்த “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படம்தான் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்ததும் இவரது தந்தையான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரே.
தொடர்ந்து தனது தந்தையின் இயக்கத்தில் “ரசிகன்”, “தேவா”, “விஷ்ணு” போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் விஜய்க்கு ஒரு பெரிய திருப்பத்தைத் தந்த முதல் திரைப்படம் என்றால் அது “செந்தூரப்பாண்டி”. நடிகர் விஜயகாந்தோடு இணைந்து இவர் நடித்திருந்த இத்திரைப்படத்தை இயக்கியிருந்ததும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்.
இதன் பின்பு தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஒரு உச்ச நடிகர் என்ற இலக்கை எட்டிப் பிடித்து, நடிகர் விஜய் பிஸியாக இருந்த காலகட்டத்தில், மீண்டும் நடிகர் விஜயகாந்த் மற்றும் விஜய் கூட்டணியில் ஒரு படத்தை தர விரும்பினார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். ஆனால் நடிகர் விஜய் அப்போது வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த காரணங்களால் அவரால் இந்தத் திட்டத்திற்குள் வர இயலாமல் போக, பின்னர் நடிகர் விஜயகாந்த், நடிகர் சூர்யா கூட்டணியில், இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கித் தந்த திரைப்படமாக வெளிவந்ததுதான் இந்தப் “பெரியண்ணா”.
நடிகர் விஜயகாந்த் சினிமாத் துறைக்கு வந்த நாளிலிருந்து, அவருடைய உதவியாளராக நீண்டகாலமாக இருந்து வந்தவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான எஸ் கே சுப்பையா. இவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நடிகர் விஜயகாந்த், இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். நட்புக்காக இந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்துக் கொடுத்திருந்தாலும், படம் முழுவதும் அவரது கதாபாத்திரம் பயணிக்குமாறு திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். ஊதியம் ஏதுமின்றி, உதவும் நோக்கோடு நடிகர் விஜயகாந்த் நடித்துக் கொடுத்த திரைப்படம்தான் இந்தப் “பெரியண்ணா”.
படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த தனுஜா என்ற ஒரு மாடலை நாயகியாக ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்திருந்தார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். ஆனால் பின்னர் நடிகை ஈஸ்வரி ராவின் தங்கையும், “காக்கைச் சிறகினிலே” திரைப்படத்தில் 'கண்மணி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகையுமான மானஸாவை நாயகியாக நடிக்க வைத்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் மூலமாகத்தான் புதுமுக இசையமைப்பாளராக பரணி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தனது மகனும், நடிகருமான விஜய்யை இந்தப் படத்தில் நடிக்க வைக்க இயலாமல் போயிருந்தாலும், இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களில் மூன்றினை நடிகர் சூர்யாவிற்காக நடிகர் விஜய் பாடியிருந்தது புதுமையான ஒன்றாகவே அப்போது அமைந்திருந்தது.
தான் நடித்த திரைப்படங்களில் தனக்காகப் பாடியிருந்த நடிகர் விஜய், வேறு படங்களில் பிற நடிருக்காக அவர் பின்னணிப் பாடியிருந்த முதல் மற்றும் இறுதித் திரைப்படமாகவும் பார்க்கப்பட்ட திரைப்படம்தான் இந்தப் “பெரியண்ணா” திரைப்படம். விஜயகாந்த், மீனா, சூர்யா, மானஸா, மணிவண்ணன், மனோரமா, தேவன், சச்சு, ஆனந்தராஜ், ஆர் சுந்தர்ராஜன், வினு சக்கரவர்த்தி, வையாபுரி, அஜய் ரத்னம் என பலர் நடித்திருந்த இத்திரைப்படம், 1999ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து, வசூல் ரீதியாக ஏமாற்றத்தை சந்தித்தது என்பதுதான் உண்மை.