உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கரீனா கபூருக்கு டப்பிங் குரல் கொடுக்கும் பார்வதி

கரீனா கபூருக்கு டப்பிங் குரல் கொடுக்கும் பார்வதி

மலையாள நடிகையான பார்வதி தனது படங்களுக்கு மலையாளத்தில் தானே டப்பிங் பேசிக்கொள்வார். முதன்முதையாக இன்னொரு நடிகையான பாலிவுட் நடிகை கரீனா கபூருக்காக குரல் கொடுப்பதன் மூலம் டப்பிங் துறையில் அடி எடுத்து வைத்துள்ளார் பார்வதி. ஹிந்தியில் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள தாய்ரா என்கிற படத்தில் கரீனா கபூர் மற்றும் நடிகர் பிரித்விராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 18-ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படம் மலையாளத்திலும் வெளியாக இருக்கிறது.

இதில் டிசிபி அஜூனி கோஹ்லி என்கிற சக்தி வாய்ந்த காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடித்துள்ளார். அவரது தோற்றத்திற்கு பார்வதியின் குரல் செட்டாகும் எனக் கூறி அவரை டப்பிங் பேச வைத்துள்ளார்கள். ஏற்கனவே பிரித்விராஜின் நட்பு வட்டாரத்தில் பார்வதி இருப்பதாலும், இந்த படத்தில் பிரித்விராஜ் நடித்திருப்பதாலும் அவர் மூலமாகத்தான் இந்த வாய்ப்பு பார்வதிக்கு கிடைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து பார்வதி கூறும்போது, டப்பிங் துறையில் நுழைய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.. ஏதோ ஒரு அனிமேஷன் படத்திற்குத்தான் குரல் கொடுக்கும் வாய்ப்பு முதலில் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் கரீனா கபூர் போன்ற ஒரு முன்னணி நடிகையின் ஆழமான கதாபாத்திரத்திற்கு என் குரல் மூலம் டப்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !