பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்
தமிழில் மட்டுமல்ல, மலையாளத்தில் நல்ல படங்கள் வந்தால் அந்த படக்குழுவை பற்றி பேசுவதும், சிலமுறை அவர்களை நேரில் அழைத்து பாராட்டுவதும் கமல்ஹாசன் பாணி. தனது ஆரம்ப காலத்தில் பல மலையாள படங்களில் நடித்ததால் இந்த பாசம்.
மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை அப்படி அழைத்து பாராட்டினார் கமல்ஹாசன். அவர் கண் பட்டபின்னரே அந்த படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி கிடைத்தது. தமிழகத்தில் பெரிய ஹிட்டானது. இந்நிலையில் பஹத் பாசில் தயாரிப்பில் நிவன்பாலி, மமிதா பைஜூ நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.
கமலுடனான இந்த சந்திப்பில் ஹீரோ நிவன்பாலி, ஹீரோயின் மமிதா தவிர மற்றவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். நிவின்பாலி வெளியூரில் இருந்ததாலும், மமிதாவுக்கு உடல்நலக்குறைவு என்பதாலும் பங்கேற்கவில்லை. கமலும், பஹத் பாசிலும் விக்ரம் படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இதற்குமுன்பு இப்படி குடும்பஸ்தன், சில நேரங்களில் சில மனிதர்கள், பார்க்கிங் உள்ளிட்ட படக்குழுவையும் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார்.