அப்பா சென்டிமென்ட்டில் ஜீவா
அப்பா சென்டிமென்ட்டில் நடிக்க இன்றைய ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சூர்யா நடித்து அடுத்து வெளிவர உள்ள படமான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படமும் அப்பா சென்டிமென்ட் படம்தான். இப்போதும் ஜீவாவும் இதே பார்முலாவில் வருகிறார்.
படத்தின் தலைப்பு 'தகப்பன்'. 'கிடா' படத்தை இயக்கிய ரா.வெங்கட் இயக்குகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். 'கருடன்', 'மாமன்' படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் குமார் தயாரிக்கும் இப்படத்துக்குச் சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது “மதுரை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் படம் இது. அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான படைப்பாக இப்படம் அமையும்” என்றார்.
டிசம்பரில் படம் திரைக்கு வருவதாக நேற்று வெளியிடப்பட்ட முதல் பார்வை போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.