171வது படத்தில் நாயகனாக நடிக்கும் சரத்குமார்
சரத்குமார் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பி.எல்.தேனப்பன் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்துள்ளது.
இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15 அன்று தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சரத்குமார் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் வில்லன், குணசித்ர வேடங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழிலும் 'போர் தொழில்' போன்று வலுவான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். என்றாலும் பல வருட இடைவெளிக்கு பிறகு கதை நாயகனாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இது ஹாரர் கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.