படப்பிடிப்பு தளத்தில் விஜயகாந்த் பாணியை பின்பற்றும் சல்மான் கான் ; நடன இயக்குனர் பெருமிதம்
பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கென ஒரு மிகப்பெரிய கூட்டத்தை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து செலவு இழுத்து விடுகின்றனர் என்று சமீப நாட்களாக ஒரு எதிர்ப்பு குரல் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வெளிப்பட்டு வருகிறது. ஆனால் நடிகர் சல்மான் கான் இதற்கு அப்பாற்பட்டவர், அவர் தன்னுடன் யாரையும் அதிகப்படியாக அழைத்து வந்து தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதில்லை என்று பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சபீனா கான் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல அவர் மேலும் கூறும்போது, 'எப்போதுமே படப்பிடிப்பு தளத்தில் பெரிய கலைஞர்களுக்கு என்று ஒரு விதமான உணவும் சாதாரண தொழில்நுட்ப பணியாளர்களுக்கு என சற்றே தரம் குறைந்த உணவும் தான் வழங்கப்படும். ஆனால் சல்மான் கான் நடிக்கும் படங்களில் அனைவருக்கும் ஒரே விதமான உணவு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்” என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இப்படி படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சம உணவு வழங்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே மறைந்த நடிகர் விஜயகாந்த் கடைபிடித்து வந்தார். அவரது பாணியை தற்போது சல்மான் கான் பின்பற்றி வருகிறார் என்பது ஆச்சரியமான தகவல்தான்.