பாரதிராஜாவின் கடைசி படமாக அமைந்த 'தொடரும்'; மோகன்லால் இரங்கல்
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் பாரதிராஜா தனது 84வது வயதில் நேற்று (ஜூன் 10) காலமானார். அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியும் இரங்கல் தெரிவித்தும் அவருடன் பணியாற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மோகன்லால் பாரதிராஜாவின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மண்ணில் கவிதையையும் மவுனத்தில் உண்மையையும் ஒவ்வொரு பிரேமிலும் ஆன்மாவையும் கண்டெடுத்த ஒரு இயக்குனர். அவருடன் தொடரும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது என் வாழ்நாளில் நான் என்றும் போற்றி பாதுகாக்கும் ஒரு பெருமையாகும். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். உங்களது கலைப் பாரம்பரியம் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். உங்களது இழப்பு எங்களை ஆழமாக வாட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
பாரதிராஜாவின் கடைசி படம் மோகன்லாலுடன் சேர்ந்து நடித்த தொடரும் திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல மலையாளத்தில் அவர் நடித்த ஒரே படமும் இதுதான்.. இந்த படத்தில் பாரதிராஜா மாஸ்டர் பழனிச்சாமி என்கிற ஸ்டண்ட் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது சிஷ்யராக ஸ்டண்ட் கலைஞராக மோகன்லால் நடித்திருப்பார். இவர்கள் இருவரும் இடம்பெறும் காட்சிகள் கொஞ்ச நேரமே என்றாலும் அனைத்தும் சென்னையில் நடப்பது போன்று படமாக்கப்பட்டன.
இந்த படத்தை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்தி இந்த கதாபாத்திரத்தை எழுதும்போதே பாரதிராஜாவை மனதில் வைத்து தான் எழுதினேன் என்று கூறியுள்ளார். படப்பிடிப்பை துவங்கி பல நாட்கள் கழித்து பாரதிராஜாவிடம் தேதி கேட்பதற்காக சென்றபோது மோகன்லாலுடன் நடிப்பதற்காக, அவருடன் கூடவே இருப்பதற்காக நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன் என்று கூறி இந்த படத்தில் நடித்து கொடுத்தார். அப்போது கூட அவரது உடல்நிலை காரணமாக நிறைய சிரமங்களை சந்தித்தார்.
படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலிடம் அவர் ரொம்பவே அன்யோன்யம் காட்டினார். மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது என்னுடைய பெரும் பாக்கியம் என்று அவர் கூற, இல்லை உங்களுடன் நடிப்பதுதான் என் வாழ்நாள் பாக்கியம் என்று மோகன்லால் கூறுவதை பார்க்கும்போது அவர்களது பிணைப்பு அவ்வளவு அழகாக இருந்தது. மோகன்லால் தனக்கென பிரத்யேகமாக ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கும் ஸ்டைல் ஒன்றை வைத்திருக்கிறார். அதுபற்றி தெரிந்து கொண்ட பாரதிராஜா என்னிடம் அதே போல நடந்து காட்டு என்று சொன்னதும் மோகன்லால் நடந்து காட்டினார். அதை பார்த்து உடனே பாரதிராஜாவும் மோகன்லாலுடன் இணைந்து ஒரு பக்கம் சாய்ந்தவாறு நடந்து சென்றதை பார்த்து படக்குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பாரதிராஜாவின் உடல்நிலை காரணமாக அவருக்கு பதிலாக வேறு யாரையாவது டப்பிங் பேச வைக்கலாம் என்று நினைத்தபோது தானே டப்பிங் பேசுவதாக கூறினார். அந்த சமயத்தில் அவர் ஞாபகமறதி பிரச்சனையால் கொஞ்சம் சிரமப்பட்டார் அதனால் அவர் அருகில் அமர்ந்து அவரது காதுக்குள் வசனங்களை மெதுவாக சொல்லி அவரை டப்பிங் பேச வைத்தேன். அவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்” என்று கூறியுள்ளார் இயக்குனர் தருண் மூர்த்தி.