பிளாஷ்பேக் : குழந்தை நட்சத்திரமாக நடித்த டி.ராஜேந்தர் மகள் இலக்கியா
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் என்ற பன்முகம் கொண்ட டி.ராஜந்தர் - உஷா தம்பதியருக்கு சிலம்பரன், குறளரசன், இலக்கியா என மூன்று குழந்தைகள். இதில் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தன் படங்களில் நடிக்க வைத்து இன்று அவர் முன்னணி நடிகராக இருக்கிறார். இளையமகன் குறளரசனுக்கு நடிப்பில் நாட்டமில்லை. ஆனாலும் ஓரிரு படங்களில் அவரும் நடித்தார்.
சிம்புவை போலவே தன் மகள் இலக்கியாவையும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து அவரை பெரிய நடிகையாக்க வேண்டும் என்று விரும்பினார். 'சம்சார சங்கீதம்' என்ற படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் சிம்புவும் நடித்தார். ரேணுகா, தேவிபிரியா வினு சக்ரவர்த்தி, தியாகு உள்ளிட்ட பலர் இதில் நடித்தனர். இந்த படம் 100 நாட்கள் ஓடினாலும், டி.ராஜேந்தரின் முந்தைய படங்களின் வசூலை பெறவில்லை.
இலக்கியா நடிகை ஆவதை ஆரம்பம் முதலே தாய் உஷாவிற்கு விருப்பம் இல்லை. ஒரு கட்டத்தில் இதை ஏற்றுக் கொண்டார் டி.ராஜேந்தர். 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இலக்கியா தற்போது கணவருடன் வசித்து வருகிறார்.