ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி படங்கள் : இது 5வது முறை
இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் 100 கோடி என்பதே ஒரு பெரிய சாதனையாக இருந்தது. அது தற்போது 1000 கோடியாக மாறி ஒரு புதிய வரம்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 2026ம் ஆண்டில் 1000 கோடி வசூலைக் கடந்த படங்களாக 'துரந்தர் 2, ராமாயணா' ஆகிய படங்கள் அமைந்துள்ளன. இன்னும் சில வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதற்கு முன்பும் இது போல நடந்துள்ளது. 2017ம் ஆண்டில் வெளிவந்த ‛பாகுபலி 2' படம்தான் முதன் முதலில் 1000 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. 2016ல் டிசம்பர் 21ல் 'தங்கல்' ஹிந்திப்படம் வெளிவந்தது. அப்போது 700 கோடிக்கும் மேல் வசூலைப் பெற்றது. அதன்பின் 2017ல் மே மாதம் சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனால், 2017ல் உலக அளவில் 'பாகுபலி 2, தங்கல்' ஆகிய இரண்டு படங்களும் 1000 கோடி வசூலைப் பெற்ற படங்களாக அமைந்தன.
அதற்கடுத்து 2022ம் ஆண்டில், தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்', கன்னடப் படமான 'கேஜிஎப் 2' ஆகிய படங்கள் 1000 கோடி வசூலையும், 2023ல், ஹிந்திப் படங்களான 'ஜவான், பதான்' ஆகிய படங்களும், 2024ல் 'புஷ்பா 2, கல்கி 2898 ஏடி' ஆகிய தெலுங்குப் படங்களும் 1000 கோடி வசூலைக் கடந்த படங்களாக சாதனை புரிந்தன.
ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்கள் 1000 கோடி வசூல் என்ற சாதனையைப் புரிந்துவிட்டன. ஆனால், தமிழ்ப் படம் ஒன்று கூட அந்த சாதனையை இதுவரை எட்டவில்லை. கடந்த மாதம் வெளிவந்த 'ஜெயிலர் 2' படம் அந்த சாதனையைப் புரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நான்கு வார ஓடிடி வெளியீடு என்பதால், வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இப்படத்தைத் திரையிட மறுத்துவிட்டன. இல்லையென்றால் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி என்ற சாதனையை இந்தப் படம் புரிந்திருக்கும்.
இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தப் போகும் முதல் தமிழ்ப் படம் எது என நாம் இன்னும் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.