உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛துரந்தர் 2' வழக்கு தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

‛துரந்தர் 2' வழக்கு தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு


கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் வெளியான ‛துரந்தர்' படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான ‛துரந்தர் 2 தி ரிவெஞ்ச்' திரைப்படம் கடந்த மார்ச் இறுதியில் வெளியாகி முதல் பாகத்தை விட மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த இரண்டாம் பாகத்தில் நம் இந்திய ராணுவ அமைச்சகம் வெளிநாட்டு உளவு விஷயங்களில் எப்படி செயல்படுகிறது என்பது குறித்தும், வெளிநாட்டில் உள்ள நம் உளவாளிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது குறித்தும் வெளிப்படையாகவே காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த தீபக் குமார் என்கிற ராணுவ வீரர் டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

மேலும் இதில் அவர் கூறும்போது, இத்தகைய வெளிப்படையான காட்சி சித்தரிப்புகளால் களத்தில் ரகசியமாக பணியாற்றும் உளவு ஏஜெண்டுகளின் அடையாளங்கள் மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் இதன் காரணமாக ஸ்பை அலர்ட் எனப்படும் உளவு எச்சரிக்கையை எடுத்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியாவின் அதிகாரபூர்வ ரகசியங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டு, இந்தப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்யுமாறும் தியேட்டர்கள்,, ஓடிடி தளங்களில் இதனை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த படத்திற்கு உடனடியாக எந்த தடையும் விதிக்கவில்லை. அதே சமயம், ஒரு திரைப்படம் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட கற்பனை கதையாக இருந்தாலும் அதில் உள்ள சென்சிட்டிவான விஷயங்களின் தாக்கத்தை நாம் முழுமையாக புறக்கணித்து விட முடியாது. தணிக்கை வாரியம் இதற்கு சில வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்று கூறி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கும் திரைப்பட தணிக்கை வாரியத்திற்கும் இந்த விஷயத்தை தீவிரமாக ஆராய்ந்து உரிய மற்றும் முறையான முடிவு எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !