என் பெயரில் நடக்கும் ஏமாற்று வேலை : ரசிகர்களுக்கு மாதவன் எச்சரிக்கை
உடல் நலம் மற்றும் எடை குறைப்பு தொடர்பான ஒரு தனியார் பிராண்ட் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடை குறைப்பு குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர்.. அதில் நடிகர் மாதவன் எப்போதோ ஒரு நேர்காணலில் பேசும்போது தான் 21 நாட்களில் உடல் எடையை குறைத்தது குறித்து பேசிய பழைய வீடியோ கிளிப்பிங்கின் ஒரு பகுதியை அவர்கள் பயன்படுத்தியிருந்தனர். பார்ப்பவர்களுக்கு மாதவன் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை பரிந்துரை செய்வது போலத்தான் அந்த இன்ஸ்டாகிராம் வீடியோ உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தைக் கண்டு கோபமும் அதிர்ச்சியும் அடைந்த மாதவன், ரசிகர்களுக்கு இது குறித்த எச்சரிக்கை விடுத்ததுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மிகவும் வெட்கக்கேடானது இது. ஒருவருடைய நேர்காணல் வீடியோவை எடுத்து தங்கள் சொந்த விளம்பரத்திற்கு பயன்படுத்த முடியாது. இது நான் அவர்களது தயாரிப்பை விளம்பரப்படுத்துவது போல ஒரு போலி தோற்றத்தை உருவாக்குகிறது. இது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடும் நிறுவனங்களிடம் ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாதவனின் இந்த தீவிர எச்சரிக்கையை தொடர்ந்து அந்த நிறுவனம் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது.