'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல்
தமிழில் தற்போது அதிகமான வெப் தொடர்கள் வெளிவரத் தொடங்கி உள்ளது. இன்று 'எக்ஸ்சாம்' என்ற தொடர் வெளியாகி உள்ளது. அடுத்தவாரம் 22ம் தேதி வெளிவர இருக்கிற தொடர் 'வாரண்ட்'. இதில் விலங்கு வெப் தொடரையும், மாமன் என்ற படத்தையும் இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜன் நாயகனாக நடித்துள்ளார். இவரின் உதவியாளர் விக்னேஷ் ராஜன் இயக்குகிறார். நம்ரிதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, நக்கலைட்ஸ் மீனா நடித்திருக்கிறார்கள். இசையை சாம்.சி.எஸ் கவனித்திருக்கிறார்.
இந்த தொடர் சாதாரண போலீசார் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களின் வலி மிகுந்த வாழ்க்கையை சொல்கிறது என்கிறார் இயக்குநர். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது : சாமானியன் ஒருத்தன் போலீஸ் வேலையில் சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு இடத்திற்கு வர விரும்புகிறான். அப்படி ஒருவனின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறோம்.
ஜெயிலில் பல வருடங்கள் இருக்கும் கைதிகள் அங்கு நன்னடத்தை சான்று பெற்றுவிட்டால் பெயில் வாங்கிக் கொண்டு சில வாரங்கள் வெளியில் வரலாம். அப்படி வரும் ஒரு சிலர் ஜெயிலுக்கு திரும்ப மாட்டார்கள். அவர்களை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வர கான்ஸ்டபிள்கள் அனுப்பப்படுவார்கள். அப்படி ஒரு பொறுப்பு கதையின் நாயகனுக்கு வருகிறது. அவன் தன் கடமையை செய்தானா, அதற்கு அவன் கொடுத்த விலை என்ன என்பதுதான் தொடரின் கதை.
இது 30 வருடங்களுக்கு முந்தைய பீரியட் கதையாக உருவாகி உள்ளது. இந்த பணிக்கு செல்லும் போலீசாருக்கு. நாம் யாரைத் தேடுகிறோம் என்பது சரிவர ஒரு தெளிவு கிடைக்காமல்கூட இருக்கும். முகவரி கொடுத்திருப்பார்கள். அங்கே தேடினால் அப்படி ஒரு ஆளே இருக்க மாட்டார்கள். அவர்களைப் பிடித்து வந்து கோர்ட்டில் நிறுத்த வேண்டும். இப்போதாவது ஆதார் கார்டுகள் உண்டு. 30 வருடங்களுக்கு முன்னால் அதெல்லாம் கிடையாது. பல உண்மைச் சம்பவங்களோடு கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை. என்றார்.