உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை
தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை மிருணாள் தாக்கூர். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதேசமயம், சினிமாவில் நுழைந்த ஆரம்பக் காலகட்டத்தில் தனது உடல் எடை மற்றும் தோற்றம் காரணமாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் உருவ கேலியையும் சந்தித்துள்ளதாகச் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள மிருணாள் தாக்கூர், எப்படி அக்ஷய் குமாரின் அறிவுரை தன்னை ஒரு தைரியமான பெண்ணாக மாற்றியது என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, என்னைப் பற்றிய உருவ கேலிகளை சோசியல் மீடியாவில் பார்த்து மிகுந்த மன வேதனை அடைந்திருக்கிறேன். பல இரவுகள் அழுதுகொண்டே தூங்கி, காலையில் வீங்கிய கண்களுடன் எழுவேன். அப்போது இதெல்லாம் தேவையா என்று எனக்கே தோன்றும். அந்த இக்கட்டான நேரத்தில் தான் நடிகர் அக்ஷய் குமார் என்னிடம், 'உன்னைச் சுற்றி இருப்பவர்கள் உன்னைத் தூண்டும் விதமாக ஆயிரக்கணக்கான விஷயங்களைச் சொல்வார்கள். அதைக் காதில் வாங்காமல் உனக்கு சரி என தோன்றுவதைச் செய்வது நல்லது. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் உனது உடல் எடையைக் குறைக்கும்படி கூறினால் மட்டுமே அதற்காக நீ அதைச் செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்களுக்காக அல்ல' என்று அறிவுரை கூறினார்.
அதன் பிறகுதான் மற்றவரின் விமர்சனத்திற்காக எனது உடலை மாற்றிக் கொள்ளாமல், எனது இயல்பான அழகை நானே நேசிக்கத் தொடங்கினேன். ஒரு ரசிகை எனது தோற்றத்தைப் பாராட்டிய போதுதான், நான் மற்றவர்களின் பார்வையில் அழகாக இருப்பதாக உணர்ந்தேன் என்றும் கூறியுள்ளார் மிருணாள் தாக்கூர்.