நீக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் வேலை ; நடிகர் சங்க நிர்வாகி மீது ஸ்வேதா மேனன் அதிரடி நடவடிக்கை
மலையாளத்தில் கடந்த வருடம் வரை நடிகர் சங்கத்தில் மோகன்லால் தலைமையில் பொறுப்பு வகித்த அணி, ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக ராஜினாமா செய்தது. அதனைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றார். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் உறுதி கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் அலுவலக மேலாளராக பணிபுரிந்த அதுல்யா என்பவரை சங்கத்தின் பொருளாளர் உன்னி சிவபால் மற்றும் பொதுச்செயலாளர் குக்கு பரமேஸ்வரன் ஆகியோர் அவரது பணி திருப்திகரமாக இல்லை எனப் பதவி நீக்கம் செய்ததாக எர்ணாகுளம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார் அதுல்யா.
ஸ்வேதா மேனன் பொறுப்பு ஏற்ற பிறகு வரும் முதல் புகார் இது என்பதால், இந்தப் புகாரை விசாரித்த ஸ்வேதா மேனன் மீண்டும் அந்தப் பெண் ஊழியரை நடிகர் சங்கப் பணியில் சேரும்படி உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்ல, சங்கத்தின் பொருளாளராக உன்னி சிவபாலை கட்டாய விடுப்பில் செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளார். நடிகர் சங்கத்தில் பிரச்னை கிளம்பிய அடுத்த நாளே இதற்கான தீர்வை அதிரடியாக எடுத்து அமல்படுத்திய ஸ்வேதா மேனனுக்கு பாராட்டுகள் குவிக்கின்றன.