உயரம் காரணமாக பல வாய்ப்புகளை இழந்தேன் ; அஜித் பட நாயகி வருத்தம்
தமிழில் அஜித் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அவரது தோழியாக நடித்தவர் பாலிவுட் நடிகை பூஜா பத்ரா. மேலும் 'ஒருவன்' படத்தில் சரத்குமார் ஜோடியாகவும் நடித்திருந்தார். இவர் சினிமாவுக்கான அனைத்து லட்சணங்களையும் பெற்றிருந்தாலும் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் தனது உயரம் தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் பூஜா பத்ரா.
1990களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த பூஜா பத்ரா, அந்த காலகட்டத்தில் இருந்த பல கதாநாயகர்கள் தன்னுடன் உயரம் காரணமாக நடிக்கத் தயங்கியதாகவும் இதனால் பல பட வாய்ப்புகள் தன் கையை விட்டு நழுவிப் போனதாகவும் கூறியுள்ளார்.
அதேசமயம் நடிகர் சல்மான்கானுடன் நடித்தபோது அவர் தாராளமாக நீங்கள் ஹீல்ஸ் அணிந்து கொள்ளுங்கள், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று ஊக்கப்படுத்தியதாகவும் பூஜா நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். தற்போது சினிமா தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் படைப்பாளிகள் இடையே ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக உயரம் ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுவதில்லை என்றும் தனது மகிழ்ச்சியை அவர் தெரிவித்துள்ளார்.