இந்தியன் பனோரமா திரைப்பட விழாவிற்கு தேர்வான ‛‛தாய்கிழவி, அறிவு''
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமாரின் முதன்மை வேடத்தில் நடித்து பிப்ரவரி மாதம் வெளியான படம் ‛தாய்கிழவி'. சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனீஷ்காந்த், இளவரசு மற்றும் ரேச்சல் ரெபகா உள்ளிட்டோர் நடித்தனர். கிராமத்து பின்னணியில் நகைச்சுவை படமாக வெளியானது. சிவகார்த்திகேயன் தயாரித்தார். சூப்பர் ஹிட்டான இப்படம் 75 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்தபடம் கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‛இந்தியன் பனோரமா 2026' பிரிவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகி உள்ளது. இதை படக்குழு மகிழ்ச்சி உடன் அறிவித்துள்ளது.
அறிவு படமும் தேர்வு
இதேப்போல் சாய் வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், 'கழுகு' இயக்குனர் சத்ய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அறிவு. 'உறியடி' விஜயகுமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் செய்தியுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஐ.எம்.விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகி உள்ளது. மேலும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் அறிவு படம் தியேட்டர்களில் வெளியாகிறது.