நடிகைகளுக்கு காதலிக்க மட்டும் தான் தெரியுமா...? பார்வதி கேள்வி
தமிழில் சசி இயக்கிய பூ என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. அதன்பிறகு சென்னையில் ஒரு நாள், மரியான் , பெங்களூர் நாட்கள், தங்கலான் என பல படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். பார்வதி அளித்துள்ள ஒரு பேட்டியில், படத்துக்கு படம் நடிகைகளை ஹீரோவை காதலிக்கும் வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வருவதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் .
அவர் கூறுகையில், ‛‛நான் நடிக்க வந்த 7 வருடங்களாக எனக்கு வந்தது எல்லாமே காதல் கதைகள்தான். படத்துக்கு படம் ஹீரோக்களுடன் டூயட் பாடி சலிப்பு ஏற்பட்டது. நடிகைகள் என்றால் காதலிக்கு மட்டும் தான் தெரியும் என்று நினைப்பது தவறு. எங்களைப் போன்றவர்களுக்கும் சமூக நோக்கமுள்ள கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும். அதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதன் பிறகு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினேன்.
திரையுலகில் ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் இருக்க கூடாது. ஆண்கள் பிரச்னை, பெண்கள் பிரச்னை என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல், மனிதர்களை மையப்படுத்திய பிரச்னை, மனிதர்கள் சம்பந்தப்பட்ட கதைகள் என்ற மனநிலையுடன் இயக்குனர்கள் கதைகளை உருவாக்க வேண்டும். எந்த பிரச்னையாக இருந்தாலும் அது சமூக பிரச்னையாகவே பார்க்க வேண்டும். குறிப்பாக பெண்களின் திறமையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் பார்வதி.