'கர' புரமோஷன் மேடையில் காலில் விழுந்த ரசிகை ; பதறிய தனுஷ்
கடந்த வருடம் தெலுங்கில் 'குபேரா', தமிழில் 'இட்லி கடை', ஹிந்தியில் 'தேரே இஷ்க் மெய்ன்' என மொழிக்கு ஒன்றாக மூன்று படங்களில் நடித்திருந்தார் தனுஷ். இந்த நிலையில் 'போர் தொழில்' இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர' திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. மமிதா பைஜூ இதில் கதாநாயகியாக நடிக்க, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தனுஷின் படங்களுக்கு தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் 'கர' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை நேற்று ஹைதராபாத்தில் படக்குழுவினர் நடத்தினர். இந்த நிகழ்வின்போது தனுஷை காண்பதற்கு ரசிகர்கள் ஏராளமாக திரண்டு இருந்தார்கள். அதில் மேடை ஏறிய ஒரு பெண் ரசிகை ஒருவர் திடீரென்று பேசிக்கொண்டிருந்தபோதே முழங்காலிட்டு அமர்ந்து தனுஷை வணங்கினார்.
அவரது இந்த செயலால் பதறிப்போன தனுஷ், அவரை உடனடியாக எழுந்து நிற்குமாறு வற்புறுத்தி அதன்பிறகு அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார். ஆனாலும் சோசியல் மீடியாவில் வெளியான இந்த வீடியோவை பார்த்துவிட்டு, நடிகர்கள் மீது அபிமானம் இருக்கலாம்.. ஆனால் காலில் விழும் அளவிற்கு எல்லாம் செல்லத் தேவையில்லை என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.