எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசனை விட அதிக வாக்குகள் பெறுவாரா விஜய்?
தமிழகத்தின் 17வது சட்டசபைத் தேர்தல் நேற்று ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்று முடிந்தது. 234 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளிடையே தான் பிரதான போட்டி என்றாலும், நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் முதல் முறையாக போட்டியிட்டது.
அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னை - பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். சினிமாவில் கதாநாயகனாக நடித்து அரசியல் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தவர் எம்ஜிஆர். அதனால், அவரது வழியில் அரசியல் ஆசையில் சில நடிகர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தனர். அவர்களில் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள்.
திமுக.,வில் இருந்து வெளியேறி தனியாக அதிமுக., என்ற கட்சியை துவங்கிய பின்னர் 1977ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 43,065. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனதா கட்சி வேட்பாளர் முத்துவேல் சேர்வை 13,687 வாக்குகளைப் பெற்றார். எம்ஜிஆர் பெற்ற வாக்கு சதவீதம் 56.23.
2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜயகாந்த் ஆரம்பித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிட்டது. அத்தேர்தலில் முதல் முறையாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 61,337. அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கோவிந்தசாமி 47,560 வாக்குகள் பெற்றார். விஜயகாந்த் பெற்ற வாக்கு சதவீதம் 40.4
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். அத்தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பெற்ற வாக்குகள் 51,481. அவர் பெற்ற வாக்கு சதவீதம் 33.26. ஆனாலும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து யாருடனும் கூட்டணி இல்லாமல் இந்த 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய். சென்னை பெரம்பூர் தொகுதியில் 2,22,792 வாக்காளர்களும், திருச்சி கிழக்கு தொகுதியில் 2,17,397 வாக்காளர்களும் உள்ளனர்.
கடந்த 2021ல் நடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் 1,01,330, திருச்சி கிழக்கு தொகுதியில் 1,01,730 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை மீறி விஜய் இந்த 2026 தேர்தலில் எவ்வளவு வாக்குகளைப் பெறப் போகிறார், இரண்டிலும் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரது வெற்றியைப் பொறுத்தே அவரது கட்சியின் எதிர்காலம் அமைந்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
எம்ஜிஆர் 56.23 சதவீதம், விஜயகாந்த் 40.40 சதவீதம், கமல்ஹாசன் 33.26 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளனர். அவர்களின் வாக்கு சதவீதத்தை விஜய் மிஞ்சுவாரா என்பது மே 4 அன்று தெரிந்துவிடும்.