சின்னத்திரை பிரபலங்கள் உருவாக்கும் 'தமிழினி'
டி.பி.சரவணன் மற்றும் கணேஷ் மூர்த்தி என்ற புது முகங்கள் இணைந்து “தமிழினி” என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப்படத்தில் தீபா சங்கர், திருப்பாச்சி பெஞ்சமின், 'சத்ரியன்' படத்தில் நடித்த வின்சென்ட் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சின்னத்திரை தொகுப்பாளர் ஆசிக் ஒரு கதாநாயகனாகவும், “ராயல் சல்யூட்” படத்தில் நடித்த பிரதீப் ராஜ் மற்றொரு கதாநாயகனாகவும் நடிக்கின்றனர்.
கதாநாயகிகளாக “ரத்னம்”, “டீசல்” படத்தில் நடித்த ஷாஷா சிவகுமார் மற்றும் “அன்பெனும் ஆயுதம்” வெப்சீரிசில் நடித்த புஷ்ப லதா நடித்துள்ளனர். விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர்கள் கூறும்போது, மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக சொல்லும் படம் இது. தென்மாவட்ட கடலோர பகுதிகளான முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சந்தோஷ் பாலாஜி இசையமைத்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ஒரு மென்மையான காதல் பாடலை பாடியுள்ளனர் என்றார்.