
தெருவில் நடந்து சென்ற முல்லா குடிசை ஒன்றில் இருவர் சண்டையிடுவதைக் கண்டார். உள்ளே நுழைந்த போது கணவரை இழந்த பெண்ணும், அவளின் பத்து வயது மகனும் இருப்பதைக் கண்டார்.
''சண்டையிடுகிறீர்களே... ஏன்'' எனக் கேட்டார் முல்லா.
''விளையாட்டுப் புத்தியால் இவன் படிக்க மறுக்கிறான். அடித்தும் பார்த்து விட்டேன். திருந்தவில்லை'' என்றாள்.
''பள்ளிக்கூடம் செல்வது தான் எதிர்காலத்திற்கு நல்லது'' என்றார். அவன் அலட்சியத்துடன் ஏதோ தரையில் கிறுக்கிக் கொண்டிருந்தான். பெட்டி ஒன்றின் மீது உயர்ரக துணி ஒன்று இருப்பதைக் கண்ட முல்லா, அதை எடுத்து கந்தல் கந்தலாக வெட்டி எறிந்தார். தாயும், மகனும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே சிறுவன் கிறுக்குவதை நிறுத்தி விட்டு, ''அம்மா... அந்த துணியை நான் தொட்டாலே திட்டுவாயே. இவர் கிழித்து விட்டாரே'' என்றான்.
''பள்ளிக்கு செல்லாவிட்டால் இந்த துணி மாதிரி உன் வாழ்வே வீணாகும்'' என அறிவுறுத்தினார்.
முல்லாவின் பேச்சு சிறுவனின் மனதில் மாற்றத்தை உண்டாக்கியது. உடனே புத்தகத்தை கையில் எடுத்தான். கிழித்த துணிக்குரிய பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்த பின் அங்கிருந்து புறப்பட்டார்.