சூபி ஞானி ஒருவரிடம் இளைஞன் மக்துாம் சீடனாகச் சேர்ந்தான். அறிவிலும், அடக்கத்திலும் சிறந்த அவனிடம் ஞானி அன்பு காட்டினார். அதைக் கண்ட மற்ற சீடர்கள் பொறாமை கொண்டனர்.
மக்துாமைப் பற்றி அடிக்கடி கோள் மூட்டினர். அதற்கு முடிவு கட்ட விரும்பிய ஞானி தன் சீடர்களிடம், ''உங்கள் அறிவை சோதிக்க போட்டி வைக்கப் போகிறேன்'' என்றார்.
பிறகு அவர்களின் முன்பு ஒரே வடிவம், நிறம், அளவு கொண்ட மூன்று பொம்மைகள் வைக்கப்பட்டன. ''இதில் சிறந்தது எது எனச் சொல்லுங்கள்'' என்றார் ஞானி.
சீடர்கள் அவற்றை உற்று பார்த்தாலும் விடை தெரியாமல் விழித்தனர். மக்துாம் மட்டும் மெல்லிய நீண்ட கம்பியை எடுத்துக் கொண்டு பொம்மையின் அருகில் வந்தான்.
முதல் பொம்மையின் காதில் நுழைத்தான். அதன் மறுகாது வழியாக கம்பி வெளியே வந்தது. இரண்டாவது பொம்மையின் காதில் நுழைத்த போது வாய் வழியே கம்பி வெளியேறியது. மூன்றாவது பொம்மையின் காதில் நுழைத்த போது கம்பி தொண்டைக்குள் போனது. அதைக் கண்ட மக்துாம், ''மூன்றாவது பொம்மையே சிறந்தது.
முதல் ரக பொம்மை கேட்பதை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டு விடும். இரண்டாவது ரகம் கேட்டதை அப்படியே சொல்லுமே தவிர, அதை உள்வாங்கி திருத்திக் கொள்ளாது. மூன்றாவது ரகம் கேட்டதை ஜீரணித்து தன் வாழ்வை சீர்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே மூன்றாவது பொம்மை போல மனிதன் செயல்பட்டால் வாழ்வு சிறக்கும்'' என்றான். மற்ற சீடர்கள் ஆச்சரியத்தில் அவனையே பார்த்தனர்.